ராஜபக்ஷக்களின் பைகள் நிறைய வெற்றிக் கனிகள்.

அரசியற் சகதிக்குள் தள்ளப்பட்ட தமிழ் மக்கள்.ஆட்சிக் கவிழ்ப்பில் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாத்துவிட்டதாகவும், ஆதலால் புதிய அரசியல் யாப்பின் மூலம் விரைவில் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பறைதட்டி வெற்றிவிழாக் கொண்டாடுகிறது.பாரிய கட்-அவுட்டுக்களை கட்டிக் காட்சிப்படுத்தியவாறு கொட்டுமேளங் கொட்ட வடமராட்சியில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

ஆனால் அண்மையில் பெங்களுருக்குப் பயணம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும், இன்றைய எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ இந்து பத்திரிகைக் குடும்ப என்.ராம் உடனான நேர்காணலில் பின்வருமாறு உண்மையை அவிழ்த்துவிட்டுள்ளார்.

வினா, என்.ராம் : நீங்கள் மூன்று வாரந்தான் பிரதமராக இருந்திருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கோ, உங்கள் கட்சிக்கோ பெரிய இலாபம் எதுவுமில்லை என்ற பார்வை இங்குண்டு. அந்தப் பிரதமர் பதவியை ஏன் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்?
[N. Ram : You had three weeks as Prime Minister. Perception here was that there was not much for you or the party. Why did you accept the Prime Ministership? ]

பதில், ராஜபகஷ : நாடாளுமன்றத்தில் காணப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வெற்றிகரமாக உடைத்துவிட்டோம். அது ஒரு நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன்.
[Rajapaksa : We managed to break the two – third majority in Parliament. I think it is a good think.]

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் யாப்பு முறையிலான அரசியல் தீர்வு என்பது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தினால் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியல் தீர்விற்கான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் விரைவில் கொண்டுவரப்படப் போகிறது என்று கூறப்பட்டலாயிற்று.

நாடாளுமன்றத்தில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருந்திருக்கக்கூடிய மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலத்தின் பின்னணியில் அரசியற் பேரம் பேசுவதற்கான களம் பெரிதாகத் திறந்திருந்தது. ஆனால் அரசியற் பேரம் பேசல்களுக்கான இந்தக் களம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ராஜபக்ஷக்களுக்குப் பாதகமானதாகவும்;, ரணிலுக்குச் சாதகமானதாகவும் காணப்பட்டது.

எனவே மூலோபாய ரீதியில் இந்த மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலம் என்ற விடயத்தை உடைத்தால் நல்லாட்சி அரசாங்கத்தின் அத்திவாரக்கல்லு பொறிந்து போய்விடும். அதாவது மூன்றில்-இரண்டு என்ற மூலைக்கல்லை கழட்ட வேண்டியது பிரதான மூலோபாயமாக இருந்து.
இதில் ராஜபக்ஷக்களுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. ஒன்று இனப்பிரச்சினைக்கான தீர்வை முற்றிலும் சாத்தியமற்றதாக ஆக்குவது. மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலம் காணப்பட்டாலும் ஒருவகையில் மஹாசங்கத்தின் ஏகோபித்த ஆதரவோடு அதனை எவ்வேளையிலும் உடைக்கலாம். ஆனால் அதற்கப்பால் மிக முக்கியமான ஆழமான வேறொரு பிரச்சினை உண்டு.

இனப்பிரச்சினையின் பேராற்தான் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகிறது. இந்தப் புதிய அரசியல் யாப்பில் ஜனாதிபதிப் பதவியான நிறைவேற்று அதிகாரமற்ற பெயரளவிலான ஒரு பதவியாகவே உருவாக்கப்படும். இத்தகைய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், சுதந்திரக் கட்சியின் ஓரளவு நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், ஜே.வி.பி.யின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் மற்றும் தமிழ், முஸ்லிம், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவுண்டு.

இந்நிலையில் இனப்பிரச்சினையின் பேரால் இப்புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமிடத்து இனப்பிரச்சினைக்கான யாப்பு ரீதியான ஏற்பாடுகளை மஹாசங்கத்தின் ஆதரவோடு அகற்ற முடிந்தாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றுவது என்பது நிறைவேறிவிடும்.

ராஜபக்ஷக்களைப் பொறுத்த வரையில் அவர்களிடம் இது தொடர்பாக இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவதாக நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களில் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற முடியும் என்பது அவர்களது மதிப்பீடு. அது பொய்யல்ல.
இரண்டாவதாக நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமிடத்து அறுதிப் பெரும்பான்மையான வெற்றியை நாடாளுமன்றத்தில் தம்மால் பெறமுடியும் என்பதில் ராஜபக்ஷக்கள் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள். கடந்த உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் தாம் பெற்ற அபரிமிதமான வெற்றிகளின் அடிப்படையில் இந்த முடிவை உறுதியாகக் கொண்டுள்ளார்கள். ஆதலாற்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விடயத்தில் அதிகம் துடிப்புடன் செயற்படுகின்றனர்.

இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் போது அரசாங்கம் அமைக்கும் கட்சியுடன் விலைபோகவல்ல சந்தர்ப்பவாத அரசியல் வரலாற்றைக் கொண்ட ஏனைய கட்சிகளும், தலைவர்களும் இலகுவாகக் கூட்டுச் சேருவார்கள். இதுவும் சாத்தியம். அப்போது மூன்றில்-இரண்டு பெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் மூன்றாவது தடவையும் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற அரசியல் யாப்புத் திருத்தத்தை மேற்கொண்டு மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக ஆக்கலாம்.
இனப்பிரச்சினையின் பேரால் ஒரு சிக்கல் எழும்போது அதனை இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய அரசியல் வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது.

இந்தவகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கப்படுகிறது என்ற பின்னணியில் அதனை இலகுவாகவே சிங்கள மக்களினதும், மஹாசங்கத்தினதும் ஆதரவுடன் தடுத்து நிறுத்த முடியும்.இப்போது இனப்பிரச்சினைக்குத் தீர்வான புதிய அரசியல் யாப்பு என்ற பெயரில் இந்த யாப்பிற்கு எதிரான ஒட்டுமொத்த முன்னெடுப்புக்களை ராஜபக்ஷக்கள் செய்ய மஹாசங்கமும், சிங்கள மக்களும் ஆதரவாக உள்ளார்கள். எனவே ஜனாதிபதி முறைமையை நீக்குவதான புதிய அரசியல் யாப்பு உருவாக்க விவகாரமும் இதனோடு சேர்ந்து அடிப்பட்டுப் போய்விடும்.

இந்நிலையில் புதிய யாப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்களை தமிமின எதிர்ப்பின் பேரால் தடுத்து நிறுத்துவதில் ராஜபக்ஷ அடிப்படையான வெற்றியை பெற்றுவிட்டார். இதில் மஹாசங்கத்தினதும், சிங்கள மக்களினதும் ஆதரவு கதாநாயகப் பாணியில் ராஜபக்ஷவிற்குக் கிடைத்துள்ளது.

அதாவது ரணில் அரசாங்கத்தைக் கவிழ்த்து ராஜபக்ஷ ஆட்சி அமைத்த போது வெல்லும் பக்கம் போகும் ஓடுகாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இருந்தும், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் விலகி ஓடி ராஜபக்ஷ பக்கம் சேர்ந்துவிட்டார்கள். ஒருவேளை பெரும்பான்மை ஆதரவு போதாமல் ராஜபக்ஷ பதவி விலக நேர்ந்தாலும் இறுதியில் இவ்வாறு பக்கம் மாறியவர்களின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலம் முற்றிலும் உடைக்கப்பட்டுவிட்டது.

இனி இனப்பிரச்சினைக்கு யாப்பு ரீதியான அரசியற் தீர்வும் இல்லை. கூடவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்பதும் இல்லை. இப்போது அனைத்தும் கொப்போடும், குலையோடும் முறிந்து கொட்டுண்டுவிட்டது.

மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உடைக்க முடிந்தமை ஒரு நல்லவிடயம் என்று இதனைத்தான் ராஜபக்ஷ கூறியுள்ளார். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிவிழா கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

ராஜபக்ஷக்கள் தமது பலத்தை இவ்விவகாரத்தில் நிரூபித்துவிட்டார்கள். அவர்கள் மூன்றில்-இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உடைத்துவிட்டார்கள். எனவே அரசியற் தீர்வை ரணிலால் காணமுடியாது உள்ளது என்ற வகையில் ரணிலின் மீது மேற்குலம் அனுதாபம் கொள்ளும். இந்நிலையில் ரணிலுக்கு மேலும் நெருக்கடி ஏற்படக்கூடாது என்றால் ஐநா மனிதஉரிமைகள் அவையில் போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான விடயங்களில் குறைந்தது ஓராண்டிற்குரிய பின்வாங்கலை மேற்குலம் செய்ய முனையும். இதுவும் ராஜபக்ஷக்களுக்கு சாதகமானது.

எனவே இந்தவகையிலும் வெற்றிக் கனிகள் ராஜபக்ஷக்களின் பைகளில் குவிந்துள்ளன. தற்போது போர்க்குற்ற விசாரணைக்கான ஒரு புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியா முன்மொழிய உள்ளதாக செய்திகள் உள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறத்தக்க வசீகரமான நிபந்தனைகள் இருக்கும். இத்தீர்மானம் சிலவேளை எவ்வளவுதான் வசீகரமான நிபந்தனைகளைக் கொண்டவையாக இருந்தாலும் நிச்சயம் ஒரு வருடத்திற்கு மேல் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணையை பின்தள்ளக்கூடிய வகையிலேயே அமையும்.

ஆதலால் ரணிலைக் காப்பாற்ற வேண்டியதற்கான ஒருவருடகால மண்டைக் கயிற்றை ராஜபக்ஷக்கள் மேற்கின் கையில் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்தத் தேர்தல் ஆண்டில் ராஜபக்ஷக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒருவருடகால அவகாசத்தைப் பயன்படுத்தி தேர்தல்களில் அவர்கள் வெற்றிகளை ஈட்டுவதன் வாயிலாக அடுத்தகட்ட சவாரிக்குத் தயாராகுவார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

மொத்தத்தில் இந்த அரசியற் சூதாட்டத்தில் தமிழினம்தான் பாழடைந்த கிணற்றுள் தள்ளப்பட்டுவிட்டது. அதற்காக இந்த சூதாட்டத்தில் தோல்வியுற்ற சம்பந்தன் தருமருமல்ல. வெற்றிபெற்ற ராஜபக்ஷ பீமனின் கதாயுதத்திற்கு இரையுமல்ல

மு.திருநாவுக்கரசு