வெற்றியடைவதற்கான முதல் படி அதனை உளமார நம்புவதேயாகும் .. விது ராமச்சந்திரன் சட்ட துறையின் புதிய நம்பிக்கை

வெற்றியடைவதற்கான முதல் படி அதனை உளமார நம்புவதேயாகும் ..

விது ராமச்சந்திரன் சட்ட துறையின் புதிய நம்பிக்கை

பெரிய பெரிய கனவுகளே வாழ்கையின் பாதையை தீர்மானிக்கும் உங்களுக்கு வாழ்கை குறித்த கனவுகள் இல்லை என்றால் இனியாவது ஒரு கனவை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாழ்கை குறித்த உண்மையான தரிசனங்களை அது உங்களுக்கு கற்றுத் தரும் என்று நம்பிக்கை வசனம் பேசுகின்றார் இளம் சட்டத் தரணி விது இராமச்சந்திரன்.

இகுருவிக்காக அவரை சந்திப்பதற்கு அவர் புதிதாக திறந்துள்ள சட்ட நிறுவனத்திற்கு சென்றோம். மிகப் பெரிய சட்ட நிறுவனமாக அதனை மாற்ற வேண்டும் என்ற பெருங்கனவுடன் தனது புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றார் விது.

பலரும் சிறிதாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக தம்மையும் தமது நிறுவனத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் அந்த சம்பிரதாயத்திற்கு முரணாக மிகப் பெரிய அலுவலகத்தோடு தனது பயணத்தை இவர் ஆரம்பித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அவரிடமே வினவியவாறு எமது உரையாடலை ஆரம்பித்தோம்.

தனது சட்ட நிறுவனம் எவ்வாறனதாக இருக்க வேண்டும் என்ற கனவு தனக்குள் விரிந்து கிடப்பதாகவும்.

அந்த கனவு நனவாகும் போது தனது சட்ட நிறுவனத்திற்கு தேவைப்படும் இடத்தை தான் இப்போதே ஏற்படுத்தி;க் கொண்டாக கூறுகின்றார் விது இராமச்சந்திரன்.

தனது அலுவலகத்தில் இன்னமும் நிரம்பாமல் இருக்கின்ற இடங்கள் தனது கனவை திரும் திரும்ப தனக்கு நினைவு படுத்தும் என்றும் அதனை அடைவதற்கான உத்வேகத்தை அது தனக்குள் ஏற்படுத்தும் என்றும் புது மந்திரம் சொல்கின்றார் அவர்.

தமிழர் நிர்வாகத்தில் பலலின மக்களுக்கும் சகல விதமான சட்டத் தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கக் கூடியதான ஒரு சட்ட நிறுவனமாக தனது நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே அந்த இளம் சட்டத் தரணயில் பெருங்கனவு.

அதற்கான தனது முதல் படியினை எடுத்து வைத்திருக்கின்றார் விது இராமச்சந்திரன்.

குடும்ப ,பொது வழங்குகள், குற்றவியல் வழங்குகள், ஆதனக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டத் தேவைகள், குடும்ப நல வழங்குகள் என சட்டத்தின் சகல பிரிவுகளையும் கையாளக் கூடிய சட்டவாளர்களின் கூட்டிணைவாக தனது சட்ட நிறுவனம் விளங்கும் என்கின்றார் விது இரமச்சந்திரன்.

புலம் பெயர் தேசங்களில் பிறந்து வளரும் தலைமுறை தமது தாய் மொழிப் பயன்பாட்டை சரியான முறையில் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தனது வெற்றிக்கு மிக முக்கிய பங்கினை தனது தமிழ் மொழியறிவு வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.

இள நிலை சட்டத் தரணியாக தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கான நேர் முகத் தேர்வில் தனக்கு தமிழ் மொழியில் நல்ல பரீட்சயம் இருப்பதை சிறப்பு தகுதியாக கருதி ரொரன்ரோவின் மிகப் பெரிய சட்ட நிறுவனம் தன்னை பணிக்கு அமர்தியதை அவர் பெருமையோடு நினைவு கூருகின்றார்.
தமிழ் மொழிப் பயன்பாடு கொண்ட சட்டத்தரணி ஒருவர் இருந்தமையால் அந்த நிறுவனத்தின் சேவையினை பலநூறு தமிழர்கள் பெற்று நன்மையடைந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இங்கே படித்து வளரும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியின் அறிமுகம் எதற்கு என்று அதனை உதாசீனம் செய்யும் பெற்றோருக்கு தனது வளர்ச்சி ஒரு முக்கிய படிப்பினை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

தமது தாய் மொழியை நேசிக்காத அதனை தெரிந்து கொள்ளாத மனிதர்களை ஏனைய சமூகத்தினர் மதிப்பதில்லை என்ற உண்மையினை நாம் உணர வேண்டும்.

மொழி என்பது எமது அடையாளம் அந்த அடையாளத்தை தொலைத்தால் நம்மை நாடோடிகளாகவே மற்றவர்கள் கருதுவார்கள்.
கனேடிய தேசத்தில் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய சமூகங்கள் தமது குழந்தைகளுக்கு தமது தாய்மொழியினை ஊட்டி வளர்க்கின்றார்கள்.
தமது சமூகத்தை சேர்ந்தவர்களோடு அவர்கள் தமது மொழியில் உரையாடுகின்றார்கள்.

துரதிஸ்டவசமாக எமது சமூகத்தின் இளம் தலைமுறையினர் மட்டும் தமிழ் மொழியை அந்நியப்படுத்த முயல்வதாகவுமு; அவர் வேதனை வெளியிடுகின்றார்.

யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் அதன் தமிழ் மாணவர் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து பல்வேறு சமூக நலத்த திட்டங்களையும் விது முன்னெடுத்திருக்கின்றார்.

2009ம் ஆண்டு முள்ளிவாய்கால் பேரவலம் இடம்பெற்ற வேளையில் தமிழ் மாணவர் சமூகம் வீதியில் இறங்கிப் போராடியது. பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் தலைவர்களில் ஒருவராக விதுவும் அந்த போராட்டங்களில் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.
ஆனாலும் தமது போராட்டங்கள் இங்குள்ள அரசுகளாலும் அரசியல் தலைவர்களாலும் கண்டுக் கொள்ளப்படாமல் போனமைக்கு காரணம் என்ன என்ற தேடல் தான் அவரை சட்டத்துறை நோக்கி நகர்த்தியிருக்கின்றது.
ஒரு கணக்காளராக வேண்டும் என்ற விருப்புடன் பல்கலைக்கழக கல்வியனை தொடங்கிய அவர் அங்கு சந்தைப்படுத்தல் துறையில் ஏற்பட்ட ஈடுபாட்டினால்’ அதில் பட்டம் பெற்று வெளியேறினார்.

ஆனாலும் சட்டத்தின் துணைகொண்டே எமது இனத்தின் வேதனைகளை சர்வதேச சமூகத்துடன் பேச முடியும் என்று உணர்ந்து கொண்ட பின்னர் ஒரு சட்டத்தரணியாக தான் மாற வேண்டும் என்று உறுதி கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழத்தில் சட்டக் கல்வியை நிறைவு செய்த பின்னர் ரொரன்ரோவில் உள்ள மிகப் பெரிய சட்ட நிறுவனத்தின் இள நிலை சட்டத் தரணியாக பணியாற்றி தனது அனுபவ அறிவினை வளர்த்துக் கொண்ட விது தற்போது முழுமையான சட்ட நிறுவனத்தினை ஆரம்பித்திருக்கின்றார்.
அமெரிக்காவில் கல்வி கற்ற காலப்பகுதியில் அவருடைய நெருங்கிய நண்பர்களாக விளங்கிய இருவரோடும் இணைந்து தொடர்ச்சியாக சட்ட நிறுவனம் ஒன்றை உருவாக்குவது குறித்து அவர் உரையாடியிருக்கின்றார்.
பல்லின சமூகங்களும் அவரிகளின் தாய் மொழியில் உரையாடி தமது சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு சட்ட நிறுவனமாக தமது சட்ட நிறுவனம் அமைய வேண்டும் என்பதே அவர்களின் பெரு விருப்பு.

தற்போது விது இராமச்சந்திரன் உருவாக்கியுள்ள இந்த நிறுவனத்தில் அவருடை பல்கலைக்கழக நண்பர்கள் இணைந்து கொள்ளப் போகின்றார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

அதேபோன்று இங்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றையும் விது இராமச்சந்திரனின் சட்ட நிறுவனம் வழங்கும்.

எமது மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு விதமான சட்டப்பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வினை வழங்கும் ஒரு நிறுவனமாக இராமச்சந்திரன் சட்ட நிறுவனம் விளங்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

விடா முயற்சியும் கனவுகள் மீதான அசைக் முடியாத நம்பிகையும் வாழ்கைளில் வெற்றிகளை பெற்றுத் தரும் என்பதற்கு தானே உதாரணம் என்று கூறும் அவர் தனது வாழ்வில் நடந்த மற்றுமொரு சம்பவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தான் உயர்தரபாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் ஜஸ் ஹொக்கி விளையாடுவதற்கு ஆர்வம் கொண்டிருந்ததாகவும் ஆனால் அதற்கான பயிற்சி வகுப்புகளில் இணைவதற்கு பெருமளவு பணம் தேவைப்பட்டமையால் தன்னால் அதில் இணைய முடியாமல் போனதாகவும் விது குறிபிட்டார். ஆனாலும் விளையாட்டின் மீதான தனது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஒருவர் புற்தரை ஹொக்கி விளையாட்டை தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இலவசமாக அதனை கற்றுக் கொண்டு அதில் தனது முழுத் திறமையினையும் வெளிப்படுத்தி 15 வயிதிற்குட்பட்டோருக்கான ;ஒன்ராறியோ மாகாண அணிக்காக விளையாடவும் அதனை தலைதாங்கி நடத்தும் வாய்பினை பெற்றதையும் பெருமையுடன் வெளிப்படுத்தினார்.

ஒருவாசல் மூடினால் மறுவாசல் ஒன்று திறக்கும் ஆனால் அந்த வாசலை நாம்
தொடர்ந்தும் அதனை பலமாக தட்ட வேண்டும் என்பதே வாழ்வின் தத்துவமாகவும் என்கின்றார் விது.

ஜஸ் ஹொக்கி விளையாட வசதியில்லை என்பதற்காக தான் ஓய்ந்து போயிருந்தால் ஒன்ராறியோ அணிக்கு தலைமை தாங்கும் ஒரு வாய்பினை இழந்திருக்க வேண்டும் என்றும் இதனை எமது சமூகம் ஒரு பாடமாக கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.

ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்பதற்காகவும் நினைத்தது நினைத்தவாறு நடக்கவில்லை என்பதற்காகவும் மன முடைந்து போகும் இளம் சமூகம் தற்கொலைவரை போய்விடுவது வேதனைக்குரியது.

கடுமையான உழைப்பிற்கும் முயற்சிக்கும் என்றைக்கும் பலன் கிடைக்காமல் போகாது. எனவே தான் இளம் தலைமுறை விடாமல் போராட வேண்டும். வாழ்கையில் ஏற்படும் சின்ன சின்ன பின்னடைவுகளையும்; தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல் துணிந்து முன்னேற வேண்டும்.

வாழ்கை முழுவதும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன அவற்றை தேடியடைவது தான் வாழ்வின் தனிச் சுவை. அதனை அனுவப் பாடத்தின் மூலம் கண்டடைந்த விது இராமச்சந்திரனின் வெற்றிப் பயணம் தொடரட்டும். அவரின் கனவுகள் விரைவில் கைகூட இகுருவியின் வாழ்த்துகள்.