சுதந்திரதினப் பதிவு! சுதந்திரத்தை பறித்தது அவர்களா? இல்லை தொலைப்பது நாங்களா?

சுதந்திரதினப் பதிவு! சுதந்திரத்தை பறித்தது அவர்களா? இல்லை தொலைப்பது நாங்களா?

பதின் ஏழாம் நூற்றாண்டின் இறுதியும் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பமுமான காலப்பகுதிகள்… கட்டப்பனுக்கு எட்டப்பனும் பண்டாரவன்னியனிற்கு காக்கைவன்னியனும் என பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியா இலங்கை உட்பட்ட தேசங்களில் நிலம் சார்ந்த தாயகக்கோட்பாட்டோடு போராடிய குறுநில மன்னர்களை தோற்கடித்ததோடு நிலங்களையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டுவருகின்றனர் பிரித்தானியர்.

இவ்வாறு பெற்ற வெற்றியைத் தக்கவைக்க ஏற்றத்தாழ்வுகளைத் தூண்டுவதன் ஊடான பிரித்தாளும் தந்திரத்தோடு அந்த மக்களிடம் மண்பற்று அதாவது நிலம் சார்ந்த தாயகக்கோட்பாடும் இல்லாது அழிக்கப்படவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தனர் பிரித்தானியர்.

காலப்போக்கில் உயர்கல்வி கற்பதன் ஊடாக உத்தியோகம் கைநிறையக்காசு என்கிற பொருளாதார நிலையை உருவாக்குதல் வெளிநாட்டுப்பயணம் என்கின்ற உல்லாச வாழ்க்கை என அம்மக்களை நோக்கி புதிய கனவுகளை திணித்தனர். இதனை ஊக்குவிக்கும் முகமாக வெளிநாட்டில் படித்தவர்கள் சிலரிற்கு சேர் பட்டமும் வழங்கிக் கௌரவித்து மக்களை மெல்ல மெல்ல மடைமாற்ற ஆரம்பித்தனர் பிரித்தானியர்.

முதலில் மேல்தட்டுவர்க்கத்திடம் தொற்றியிருந்த இந்த நோய் நடுத்தரவர்க்கத்தையும் கடந்து ஆழ ஊடுருவியது. கல்வி பொருளாதாரம் கடல்கடந்த பயணங்கள் என்று அதையே கனவாக்கி அதையே பழக்கமாக்கி அதையே வாழ்வாக்கி அதையே கொண்டாடி அதையே கௌரவமாக்கி அதையே கலாச்சாரமாக்கிவிட்டார்கள்.

போதைக்கு அடிமையானவர்கள் மீண்டுவரமுடியாததுபோல் பிரித்தானியரின் காலணியாதிக்க இருப்பிற்கு தம்மை அறிந்தும் அறியாமலும் பலியாக்கியவர்கள் மீண்டெழமுடியாமல் மூழ்கிக்கிடந்தனர். அது ஒரிரு தசாப்தங்கள் அல்ல இரண்டு நூற்றாண்டுகளிற்கும் மேல் என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விடயம்.

இவ்வாறு நிலம் சார்ந்து அதாவது தாயகக்கோட்பாடு சார்ந்து கல்வியையும் பொருளாதாரத்தையும் கனவையும் கட்டியமைக்காத அல்லது கொண்டிராத அவர்கள் ஒவ்வொருவரினதும் தனிமனித வளர்ச்சியானது பூகோள பிராந்திய அரசியலை எதிர்கொண்டு தாம்பெற்ற வெற்றிகளை தக்கவைக்கமுடியாதவர்கள் ஆக்கியது.

அரசியல் இராஜதந்திர அறிவில் பலவீனமானவர்களாக சிங்கள ஒடுக்குமுறை தொடர்பான முன்னெச்சரிக்கையோ விழிப்புணர்வோ போதியளவு இல்லாதவர்களாக இயல்பாக தோன்றக்கூடிய போராட்ட உணர்வைக்கூட கையாளத்தெரியாதவர்களாக உருவாக்கியது.

இதனால் சிறு தவறும் கூட மாபெரும் மூலோபாயத்தவறில் முடிந்துவிடக்கூடிய ஆபத்து நிலையில் இருந்தனர் என்பது துயரம். அதனை அறியாதிருந்தனர் என்பது பெரும் துயரம்.

ஏற்கெனவே மேலே சொன்னது போல பிரித்தானியரால் சேர் பட்டம் வழங்கி கொண்டாடப்பட்ட தலைவர்களான சேர் பொன் இராமநாதன் அருணாசலம் சகோதரர்கள் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்தனர்.

1918 -1920 காலப்பகுதியில் அருணாசலம் ஒரு கொள்கை முடிவை வெளிப்படுத்துகிறார்.

சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் இணைந்து வாழவேண்டும் அதேவேளை முழு இலங்கைத்தீவும் பிரித்தானியரிடம் இருந்து விடுபட்டு இந்திய கூட்டாட்சி அரசில் இலங்கையும் ஒரு மாகாணமாக இணைக்கப்படவேண்டும் என்கிறார்.

பிரித்தாளும் தந்திரத்தையே தமது பிரதான தந்திரோபாயமாக கொண்டியங்கும் பிரித்தானியாவால் இலங்கையை இந்தியாவுடன் இணைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? வரலாற்று ரீதியாக இந்தியா மீதும் தமிழர்கள் மீதும் அச்சம் கொண்டுள்ள சிங்களவர்களால் இம்முடிவைக்கண்டு எப்படி அச்சம் கொள்ளாது இருக்கமுடியும்?

ஆக இது பூகோள பிராந்திய அரசியல் விஞ்ஞான அறிவுவளர்ச்சியின் வறட்சியால் ஏற்பட்ட ஈழத்தமிழர் வரலாற்றின் மிகப்பெரிய மூலோபாயத்தவறாகிறது. மேதமைத்தனம் பேசிக் கொண்டாடும் தமிழர்களின் அரசியல் அறிவீனத்தின் முன் உதாரணமாகின்றது.

அடுத்த சம்பவம் 1927 ஆம் ஆண்டு நடக்கிறது. மகாத்மா காந்தியை யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் யாழிற்கு வரவழைத்து மகத்தான வரவேற்பு அளிக்கிறது. இந்திய விடுதலைப்போராட்டத்திற்கென நிதியும் திரட்டிக் கொடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே பிரித்தானியரிற்கு இருந்த அச்சம் மேலோங்குகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கையை தமிழர்கள் இணைக்கப் போகிறார்கள் என்று பிரித்தானியா பேரச்சம் கொள்கிறது.

இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்கு அருகிருக்கும் இலங்கை ஒரு தனி நாடக இருப்பதே பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நலன்களுக்கு நன்மை என்ற மூலோபாய முடிவின்; அடிப்படையில் இலங்கைத்தீவில் அரசியல் இராணுவ வியூகங்களையும் நிர்வாக கட்டமைப்புகளையும் உருவாக்கி வந்த பிரித்தானியர் இந்தியாவுடன் இணைந்துபோவதான தமிழரின் நிலைப்பாட்டால் சீற்றமடைகிறார்கள்.

இதுவரை பிரித்தாளும் தந்திரப்படி சிங்களவரிற்கு எதிராக தமிழரிற்கு சலுகை செய்து இலங்கையை ஆளும் உத்தியை பிரித்தானியர் பிரயோக்கித்து வந்தனர். இப்போது சிங்கள இனத்திற்கு சாதகமானதும் தமிழினத்திற்கு பாதகமானதுமான அரசியல் மூலம் சிங்கள இனத்தின் ஆதரவைப்பெற்று இந்தியாவுடன் சிங்கள இனத்தவரை இணையவிடாது தடுப்பதற்கான உத்தியைக் கைக்கொள்ள ஆரம்பித்தனர்.

தமிழ்த் தலைவர்களைப் பொருத்தவரை இவ்வாறான பலவீனமான வரலாற்று யதார்த்தத்தையும் ஆபத்தையும் அதனுடன் இரண்டறக் கலந்துள்ள பிராந்திய மற்றும் சர்வதேச அடிப்படையிலான புவிசார் அரசியல் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளும் அறிவோ எதிர்கொள்ளும் வல்லமையோ அப்போது இருந்திருக்கவில்லை.

இத்தனை துயரத்திற்கும் தவறிற்கும் காரணம் தாயகக்கோட்பாடு தொடர்பான தேவையையும் புரிதலையும் உருவாக்கியிராததுதான். சேர் பொன்.இராமநாதன், சேர் பொன் அருணாசலம், கன்ரி பேரின்பநாயகம், ஜி.ஜி பொன்னம்பலம், எஸ்.ஜேவி செல்வநாயகம் போன்ற தலைவர்களிடம் எல்லாம் சுதந்திரம் அறிவிக்கப்படும்வரையான காலத்திற்கு அண்மையான காலம்வரை தாயகக்கோட்பாட்டு கொள்கை முடிவுகள் இருந்ததில்லை அல்லது தோன்றவில்லை.

இச்சம்பவங்களின் தொடர்விளைவாக காலணியாதிக்கம் அகலும் காலத்தில் யாப்பு வரைபில் செல்வாக்குச் செலுத்த தமிழ்த்தலைமைகளால் முடியாமல் போனது. காரணம் இலங்கை பிரித்தானியாவிற்கு கட்டுப்படக்கூடிய நாடக இருக்க இந்தியாவுடன் இணைந்துவிடாத நாடக இருக்க சிங்களத்தலமைகள் செய்த பேரம் பேசல் தமிழர்களை சிங்களவர்களிற்கு கீழ் கட்டுப்படுத்தி வைத்திருக்கக்கூடிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தித்தரவேண்டும் என்பதே.

ஏற்கெனவே இலங்கையை இந்தியாவுடன் இணைத்தல் இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு ஆதரவு என்ற தமிழர்களின் நடவடிக்கைகள் பிரித்தானியாவின் இம்மூலோபாய முடிவிற்கு வலுச்சேர்த்தது.

இதனால் காலணியாதிக்கம் அகலும் காலத்தில் பெற்றிருக்கவேண்டிய சுதந்திரம் சிங்கள தேசத்திடம் அடிமைப்படுத்தப்பட்ட துயரம் நடந்தேறியது.

கல்வி பொருளாதாரம் கடல்கடந்த பயணங்கள் என்று அதையே கனவாக்கி அதையே பழக்கமாக்கி அதையே வாழ்வாக்கி அதையே கொண்டாடி அதையே கௌரவமாக்கி அதையே கலாச்சாரமாக்கிய மக்கள் கூட்டம் அந்த அடிப்படைகளிற்கு எல்லாம் அத்தியாவசியமான அந்த அடிப்படைகளில் இருந்து மேலெழுந்து வரக்கூடிய தாயகக்கோட்பாட்டை கொண்டிருக்கத்தவறியதும் அதன் விளைவாக உருவாகியிருக்கக்கூடிய அரசியல் விஞ்ஞான அறிவுஜீவிகளை ராஜதந்திரிகளை தீர்க்கதரிசிகளை உருவாக்காததும்தான் இப்பெரும் துயரத்திற்கு காரணம்.

இவ்வாறு பிரித்தானியர் வெளியேறும் போது இலகுவாக சுதந்திரத்தைப் பெற்றிருக்கவேண்டிய மக்கள்கூட்டம் சுதந்திரத்திற்குப்பின் சுமார் முப்பது வருட அறப்போராட்டத்தையும் சுமார் முப்பது வருட ஆயுதப்போராட்டத்தையும் செய்து அதன்பின் ஒரு பத்துவருடத்தையும் தின்று செரித்து திக்குத்தெரியாத திசையில் நிற்கிறது.

போராட்டங்களும் தோல்விகளும் இனப்படுகொலையும் எனச்சிதறிய யூதர்களை இஸ்ரேல் என்ற தாயகக்கோட்பாடு இணைத்தது. அவர்களது கல்வியும் பொருளாதாரமும் தாயகக்கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்திருந்ததால் அரசியல் விஞ்ஞான அறிவு ஜீவிகளை ராஜதந்திரிகளை தீர்க்கதரிசிகளை தொடர்ந்து பிரிசவிக்க முடிந்தது. அதன் மூலமாக தேசத்தை வெற்றிகொண்டு பெற்றவெற்றிகளை காக்கவும் தொடர்ந்து வளரவும் முடிகிறது.

தமிழ் மக்கள் தொடர்பாக இருக்கும் பேரச்சம் என்னவெனில் சுமார் இருநாறு வருடம் கடந்தும் இத்தனை பேரழிவிற்குப் பின்னரும் கல்வியும் பொருளாதாரமும் தாயகக்கோட்பாட்டோடு முழுமையாக இரண்டறக்கலக்கவில்லை என்பதுதான்.

இன்னும் எளிமையாகச்சொல்வதனால் தமிழ்க்குடும்பங்களின் வாழ்வியலும் உளவியலும் என்பது பிள்ளைகளை மருத்துவர் பொறியியலாளர் சட்டத்தரணி ஆக்குவது. அதனூடாக அதிகரித்த வருமானம் காணி வீடு வாகனம் சுற்றுலா என்கின்ற செல்வந்த வாழ்க்கை. இதுவே வாழ்வின் அதி உயர் இலட்சியமாக போதிக்கப்படுகிறது. போராட்டமும் தாயகக்கோட்பாடும் தூக்கி தூர வைக்கப்படுகிறது.

கல்வி பொருளாதாரம் கடல்கடந்த பயணங்கள் என்று அதையே கனவாக்கி அதையே பழக்கமாக்கி அதையே வாழ்வாக்கி அதையே கொண்டாடி அதையே கௌரவமாக்கி அதையே கலாச்சாரமாக்கிவிட்ட தீரா உளவியல் நோயில் இருந்து அவர்கள் இன்னமும் முழுமையாக மீளவில்லை.

இதனால் அரசியல் விஞ்ஞான அறிவு ஜீவிகளை ராஜதந்திரிகளை தீர்க்கதரிசிகளை பிரசவிக்கமுடியவில்லை. அதனால் பெறுகின்ற எந்த வெற்றியையும் நிரந்தர அரசியல் வெற்றியாக்கமுடியவில்லை. குறைந்தது இரண்டு தலைமுறைகள் கடந்தாவது பெற்ற எந்த வெற்றியையும் தக்கவைக்கமுடியவில்லை.

பொருளாதாரமும் கல்வியும் தாயகக்கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த வளர்ச்சியும் தான் தமக்கும் தமது தலைமுறைக்குமான நிலையான வெற்றி என்பதைக்கூட இன்னமும் புரிந்துகொண்டு செயல்ப்படுத்தமுடியாதவர்களாய் இருக்கின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்து உலகமெங்கும் கிள்ளுக்கீரைகளாகத்தான் பாவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் சுதந்திரத்தை மற்றவர்கள் பறிக்கிறார்கள் என்பதைவிட அவர்களே தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருத்தமானது.

04.02.2019