இந்தோ பாகிஸ்தான் யுத்தத்துக்கு தூபமிடும் பாலகோட் பதட்டங்கள்

Triden V Balasingam

ஸ்ரீநகருக்கு வெளியே விடுமுறையில்  இருந்து திரும்பிய சுமார்  2500கும்  அதிகமான  பரா துருப்புகளின்  வாகன   தொடரணி  மீது  நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40கும் அதிகமான இந்திய  ராணுவத்தினர் பலியானதில் இருந்து இந்திய பாக்கிஸ்தான்  விவகாரம்  சிக்கலடைய  ஆரம்பித்தது. கடந்த  முப்பது  ஆண்டுகளுக்கும்  மேலாக இந்திய  கட்டுப்பாட்டில்  இருக்கும்  காஷ்மீரில் பல ஆயுதப்பிரிவுகள் “சுயாதீன காஷ்மீர்” கோட்பாட்டுடன்  இயங்கிவருவதும் அவற்றிற்கு  திரைமறைவில் பாக்கிஸ்தான் உதவுவதாக  குற்றம் சாட்டப்பட்ட  பின்னணியில், மேற்படி  தாக்குதலை பாக்கிஸ்தானை  தளமாக  கொண்டு  இயங்கும் ஜெய்ஷ் -இ-முகமது  அமைப்பு  உரிமை கோரியது. காஷ்மீரின்  புல்வாமா மாவட்டத்தில்  இருந்து  பயிற்றுவிக்கபட்ட  உள்ளூர்  கார  அடில் அகமது டார்   தற்கொலை தாக்குதலை  நிகழ்த்தியதும்  மிகவும்  பாதுகாப்பு  உறுதி செய்யப்பட்ட  நெடுஞ்சாலையில் மோட்டார் காரில் ஏராளமான சக்திவாய்ந்த  வெடிமருந்துகள்  எடுத்துவரப்பட்டு  வெடிக்க வைக்கப்பட்டதும்  பல கேள்விகளை  தொடுத்தது.
அவ்வாறான  கேள்விகளில் ஒன்று தான்  கார்கில்  யுத்தம்,  மும்பை  தாக்குதல்கள் மற்றும்  2016 இல்  நடந்த  யூரி  தாக்குதல்கள்  போன்ற சீண்டுதல்களுக்கு  தீர்க்கமான பதிலடி  ஒன்றை கொடுப்பதன்  மூலம்   தற்போதைய  நிலைமையை ஆட்சியில்  இருக்கும்   பாரதிய  ஜனதா கட்சி தனக்கு  சாதகமாக  பயன்படுத்தி   வரவிருக்கும்  தேர்தலை  சந்திக்க  முயலுமா  என்பதாகும். மேலதிகமாக  ராணுவ பதிலடி  ஒன்று  இந்திய தரப்பிலிருந்து கொடுக்கப்படவேண்டும் என்கிற  மக்கள் கருத்து  வலுவடைந்த நிலையில்   26ம்  திகதி  அதிகாலை 2.45 அளவில்  இந்திய  வான்படையை  சார்ந்த  மிராஜ் 2000 ரக  விமானங்கள் எல்லை  கட்டுப்பாட்டு  கோட்டை  தாண்டி  பாக்கிஸ்தான்  கட்டுப்பாடு பகுதியில்  குண்டு வீசி  தாக்கின. கார்கில்  யுத்தத்தின்  போது கூட இக்கோட்டை  தாண்டிய  பறப்பு நடவடிக்கைகள்  அப்போதைய வாஜ்பாய் அரசால்  தவிர்க்கப்பட்ட நிலையில்  1970 களின்  பின்னதாக  எல்லை  கட்டுப்பாட்டு  கோட்டை  ஊடுருவிய   இந்த   நடவடிக்கை இந்திய  தரப்பின் பயங்கரவாதத்துக்கு  எதிரான  கடுமையான  நிலைப்பாடாக கூட  இருக்கலாம். பாலகோட் மலை பகுதியில்   இயங்கிவரும்  ஜெய்ஷ்  ஆயுத அமைப்பின்  பயிற்சி முகாம்கள்  மீது  “கிளர்கதிர்  வழிநடத்தல்”    மூலமாக 1000 கிலோ எடையுடைய  4 குண்டுகள்  வீசப்பட்டதாகவும்  சுமார் 200 தொடக்கம்  300 ஆயுததாரிகள்   முகாம்களில் இருந்ததாகவும் இந்திய  தரப்பில்  சொல்லப்படுகிறது. இத்தாக்குதல்  பாக்கிஸ்தான் ராணுவத்துக்கோ சிவிலியன்களுக்கோ எதிராகவன்றி தமக்கு கிடைத்த  உளவுத்தகவல்களின்  பிரகாரம்  ஜெய்ஷ்  கிளர்ச்சிக்காரர்களால்   திட்டமிடப்பட்டிருந்த   தாக்குதல்களை   நலினபடுத்தும்  நடவடிக்கையே இதுவென  இந்திய வெளிவிவகார  செயலர் விஜய் கோகலே தரப்பால்  விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
விமான  தாக்குதல்கள்  தொடர்பாக பாக்கிஸ்தான்  தரப்பில்  இருந்து  வரும்  செய்திகள் இதற்கு  வெகு மாறாகவிருக்கிறது. பாக்கிஸ்தான்  கட்டுப்பாட்டில்  இருக்கும் பாலகோட்டில்   குண்டு  விழுந்த  இடத்தை  அண்டிய பகுதியில் இருந்து  கிளம்பி  சென்ற  போலீஸ் பிரிவு   மக்கள் நடமாட்டம்  குறைந்த  மலைப்பாங்கான பகுதியில்  4 குண்டுகள்  விழுந்தமைக்கான  பள்ளங்களையும்  முறிவுற்ற  சில பல பைன்  மரங்களையும்   கண்ணுற்றதாக   தெரிவிக்கிறது.  அப்பகுதி  மக்களில்  பலருக்கு  அதிகாலையில்  கேட்ட  குண்டுச்சத்தங்களும்  அதிர்வுகளும்  விமானங்களில்  இருந்து  வீசப்பட்ட  குண்டுகளின்  விளைவால்  என்பது  கூட   மிக  தாமதமாகவே  தெரியவந்துள்ளதாம்.  சிலருக்கு  ஏன்  தமது பகுதியை   இந்திய விமானப்படை  இலக்கு  வைத்தது  என்பது  கூட  புரியவில்லை. குண்டுவிழுந்த  பகுதியில் வெறும்  மண்  குடிசைகளும்  பின்தங்கிய  குடியிருப்புகளுமே  காணப்படுகிறது.  சாந்தால் கட்டப்பட்ட  கட்டடங்கள்  ஒன்று  கூட  இல்லை. . மாறாக  வேறு சில  தகவல்களின்  படி குண்டு  இலக்கு  தவறி  விழுந்த  இடத்தில்  இருந்து  சுமார்  இரண்டு  கிலோமீட்டர்  தொலைவில்  மலை  உச்சியில்   கிளர்ச்சிக்காரர்கள்    நிர்வகித்துவரும்  இசுலாமிய  மார்க்க  பள்ளி   ஒன்று  இருப்பதாகவும்  அதனை   அண்டிய  பகுதிகளில்  பலவருடங்களாக குறிப்பிடத்தக்க அளவு        ஜெய்ஷ் -இ-முகமதின்  பிரசன்னம்  இருந்து வந்ததாகவும்   சொல்லப்படுகிறது. ஒரு வேளை  கனகச்சிதமான தாக்குதல்  என இந்தியத்தரப்பு  வர்ணிப்பது   போலல்லாது   குண்டுகள்  இலக்கு தவறியிருக்கும்  பட்சத்தில் இந்திய  விமானப்படையின்  பிரதான இலக்காக  மலையுச்சி இருந்திருக்கலாம்.

இந்த  தாக்குதல்களின்  பின்னதாக  பாக்கிஸ்தான்  ராணுவ பிரிவு  மிக  காட்டமாக  இருக்கிறது. அதன்  தொனி ” அடுத்து எங்களின்   சந்தர்ப்பம், நிச்சயம் ராணுவ   பதில்  நடவடிக்கைகள் தீர்க்கமான  முறையில்   பிரேரிக்கப்படும்.  அவற்றின் செயல்வடிவம் குறித்த இறுதி முடிவுகள்  அரசியல் தரப்பால் மேற் கொள்ளப்படும்”  என்பதாகவும்  இருக்கிறது. “நயா பாக்கிஸ்தான்”  என்கிற  தொனிப்பொருளில்  பதவியேற்ற  பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்  இம்ரான்  கான்  இந்தியாவுடனான  உறவு  புதுப்பிக்க  படவேண்டும்   என  கூறி வந்த  நிலையில்  இந்த  தாக்குதல்கள்  மக்கள்  நிலைப்பாடு  கருதியேனும் மிக   கணிசமான  மாற்றத்தை  ஏற்படுத்தும். பாக்கிஸ்தான்  இத்தாக்குதல்களை  எல்லைகள்  குறித்த  இறைமையின்  மீது  விடுக்கப்பட்ட  தாக்குதலாக உலக  அரங்கில்  காட்ட  முயல்வதோடு குண்டு  விழுந்த  இடத்தை  உள்ளூர்  வெளியூர்  ஊடகங்களுக்கு திறந்து விடுவதன் மூலம் இந்திய  உளவு  தகவல்களையும்   பாகிஸ்தானின்  பயங்கரவாத  தொடர்பு குறித்த  குற்றச்சாட்டுகளையும்  பொய்ப்பிக்க  முயல  கூடும். ஏற்கனவே   இம்ரான்  கான் அணு ஆயுதம்  தொடர்புபட்ட  அதிகாரிகளுடன்  தேசிய பாதுகாப்பு  குழு கூட்டத்தை   கூட்டியதன்  மூலமாக உலக  அரங்கில்  பதட்டத்தை  ஏற்படுத்தி  அமெரிக்க  தலையீட்டை  எதிர்பார்ப்பது வெளிப்படை.

பிந்திய  இணைப்பு
இந்திய  வான் தாக்குதல்களை  தொடர்ந்து எல்லை கோட்டுக்கு  இருபுறமாகவும்  பலத்த ஆட்டிலறி பரிமாற்றங்கள் பதட்டத்தை  மேலும்  அதிகரித்தன. இந்திய  தரப்பில்  சில  சிப்பாய்கள்  காயமடைந்ததாகவும்  பாக்கிஸ்தான்  கட்டுப்பாட்டில்  இருக்கும்  பகுதிகளில்  வீழ்ந்த  ஷெல்களால்  ஒருசில  பொதுமக்கள்  கொல்லப்பட்டதாகவும்  ஆரம்ப  கட்ட  அறிக்கையில் இருந்து தெரியவருகிறது.
இந்நிலையில்  பாகிஸ்தான் தன் பங்குக்கு  இந்திய கட்டுப்பாட்டில்  உள்ள பகுதிகளில் எழுமாற்றாக  தெரிவுசெய்யப்பட்ட இலக்குகளை  குறிவைத்து   F-16 ரக  விமானங்கள்  மூலம்  தாக்குதல்  நடத்தியுள்ளன.
இவற்றை இடைமறிக்க  இந்திய  வான்படை  விமானங்கள்  முயன்றதில் இரண்டு  இந்திய  விமானங்கள் பாக்கிஸ்தான்  கட்டுப்பாட்டு   பகுதியில்  வீழ்ந்துள்ளன. இதன்  விமானிகள்  இருவரும் தற்போது  பாகிஸ்தான்  வசம்  இருப்பதாக  கூறப்படுகிறது. இந்தியாவால்  வீழ்த்தப்பட்ட  F-16 விமானத்தின்  விமானியின்  நிலை  குறித்தோ  அது  எங்கே  வீழ்ந்தது  என்கிற  விபரங்கள்  குறித்தோ  தெரிவான  உறுதிசெய்த  அறிக்கைகள்  எதுவும் இல்லை.
பிராந்திய  அமைதி விரிச்சலடைந்துவரும்  நிலையில்  இந்திய  தாக்குதல்களை  பிரான்ஸ்  அங்கீகரித்துள்ளது  அவுஸ்திரேலியா  உட்பட்ட  பல  நாடுகள்  பாக்கிஸ்தான்  பயங்கரவாதம்  தொடர்பில்  மென் போக்கை  விடுத்து ஆக்கபூர்வாமாக  செயற்பட  வேண்டும்  என்று  கோரியுள்ள  நிலையில் பாக்கிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான், போர்  ஒன்று  ஏற்பட்டால் அது  தனது  கட்டுப்பாட்டிலோ அல்லது இந்திய  பிரதமர்  நரேந்திர  மோடியின்  கட்டுப்பாட்டிற்கு  அமைவாகவோ  நடைபெறாது என்றும்  இந்தியாவை  அமைதியான  வழிமுறைகள்  மூலம்  பயங்கரவாதம்  குறித்து  பேச  தாம்  அழைப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவ அரசியல் தந்திரோபாயங்களுக்கு அப்பால் எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி பல வருடங்களாக அசாதாரண சூழ்நிலைகளுக்குள் சிக்கி சீரழியும் சராசரி காஷ்மீரிகள் குறித்து கவலைப்படுவது யார் என்பதே !

 

2019 பெப்ரவரி மாத இகுருவி பத்திரிகைக்காக Triden V Balasingam அவர்களால் 26/02/2019 அன்று எழுதப்பட்டது