சிலியில் காணாமல்போன ராணுவ விமானம் விபத்து – தேடுதல் பணிகள் தீவிரம்

சிலியில் காணாமல்போன ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் விமானப் படை உறுதிபட தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 38 பேருடன் பயணித்த ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம், பயணித்த சிலமணி நேரங்களிலேயே விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல்போனது.

இதனையடுத்து, காணாமல்போன சிலி ராணுவ விமானத்தை தேடும் பணியினை, சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், விமானம் காணாமல்போன ஏழு மணி நேரத்துக்குப் பின்னர், இவ் விமானம் விபத்துக்குள்ளானதாக சிலியின் விமானப்படை ருவிற்றரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிலி விமானப்படை தனது அதிகாரப்பூர்வ ருவிற்றர் பக்கத்தில், ‘விமானத்துடனான தொடர்பை இழந்து பல மணி நேரம் ஆன நிலையில் அது விபத்தில் சிக்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது’ எனப் பதிவிட்டுள்ளது.

மேலும், கிடைக்கக்கூடிய அனைத்துத் தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்களின் உதவியுடன் இணைந்து, இந்த விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடி வருவதாக சிலி விமானப்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, தான் விமானப்படை தலைமையகத்தில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.