அரசியல்- சமூக விடுதலையை நோக்கி ‘சினம் கொள்’

அரசியல்- சமூக விடுதலையை நோக்கி ‘சினம் கொள்’

ஈழ சினிமாவில் கனடாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஈழ சினிமாவிற்கு பல சிறந்த படைப்பாளிகளை கனடா கொடுத்துள்ளது. அவ் வகையில் ரொரன்ரோவில் நடைபெற்ற குறுந்திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்ற பல குறும்படங்களை இயக்கியவர் ரஞ்ஞிற் யோசப். இவரது முதலாவது படமான துரோகம் குறும்படம். அன்றைய இளைஞர்களின் வன்முறையின் மூலத்தை ஆய்வு செய்த படம். அதன் பின்னர் பல குறும்படங்களை நெறியாள்கை செய்துள்ளார். அவர் பின்னர் இந்தியா சென்று பல படங்களில் பணியாற்றியிருந்தார். உதவி இயக்குனராக, இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவுக் கருவி விற்பனை மற்றும் வாடகைக்கு விடும் நிறுவனத்தை நடாத்திவருகின்றார்.

ரஞ்ஞித் கார்ல்ட்டன் பல்கலைக் கழகத்தில் கட்டிடக்கலையியல் கற்று வந்தார். அதனை இடையில் நிறுத்திவிட்டு ரொரன்ரோவில் உள்ள Tribes Film Institute ல் திரைப்படவியல் கற்றார். 2010ல் 9.50 முழு நீளத் திரைப்படம் இயக்கியிருந்தார். இவரது துணைவியார் காயத்திரி The Ontario College of Art and Design University (OCAD U) பட்டதாரி. புகைப்படக் கலைஞர். மிகச் சிறந்த வரைகலைக் கலைஞர் (Graphic Artist). காயத்திரி சினம் கொள் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவர். ரஞ்ஞிற்ன் திரைப்பட முயற்சிகளுக்காக பல தியாகங்களைச் செய்துவருகின்றார்.

ரஞ்ஞிற் தனது ஆரம்ப காலக் குறும்படங்களிலிருந்து எமக்கான திரைப்பட மொழியை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றுகின்றார். காட்சி உருவாக்கத்தில் இவர் செலுத்தும் கவனம் மிக முக்கியமானது. கதை கூறும் உத்தி மிக முக்கியமானது. நவ யதார்த்தவாத அழகியலை இவரது படங்களில் காணலாம். போரின் போதும், அதன் பின்னருமான சமூக, அரசியல் நிர்ணயக் காரணிகளை இவர் கேள்விக்குட்படுத்திவருகின்றார். தேசியம் குறித்த கருத்தாடல்களை இவர் ஒரு விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகி வருகின்றார். தேசிய கருத்தாக்கங்களை தனது படைப்புக்களில் அதன் கலாச்சார, அரசியல், ஒடுக்குமுறையின் பின்புலத்துடன், அதன் அகக் காரணிகளையும் குறிப்பாக பிரதியாக்கங்களையும் வெளிப்படுத்துகின்றார். ஒரு உரையாடல் வெளியை இவரது படங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஞாயிறு அன்று வூட்சைட் சினிமாவில் இவரது புதிய படமான சினம் கொள் திரையிடப்பட்டது. தனிப்பட்ட காட்சியாக அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான திரையிடப்பட்டது. இப் படத்தில் மேற்கூறிய கூறுகளைக் காணலாம். இப் படம் போருக்குப் பின்னரான இன்றைய வட மாகாண வாழ்வியலை படம் பிடித்துள்ளது. அங்கு தோன்றியுள்ள வன்முறைகள், ஆவாக் குழுவின் வன்முறை, அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனம், இளைஞர்களின் வாழ்வு குறித்த நம்பிக்கையீனம், மறுவாழ்வு கொடுக்கப்பட்ட எனக் கூறப்பட்ட விடயத்தின் பின் வெளிவரும் போராளிகளின் எதிர்காலம், அரசின் திட்டமிட்ட இன அழிப்பு, அங்கு வாழும் தமிழர்களின் எதிர்காலம், புலம் பெயர் தமிழர்களின் அக்கறையீன்மை, புலம் பெயர்ந்த தமிழர்களின் தவறவிடப்பட்ட கடமை போன்ற பல விடயங்களை இப் படம் பேசியுள்ளது.

ஒரு தமிழனாக, தனது குற்றயுணர்வின் வெளிப்பாடாக இப் படத்தை படைத்துள்ளார். இவரது மனச்சாட்சியாக இப் படம் உள்ளது. தனது அக உணர்வுகளுடன் முரண்பட்டு ஒரு மோதல் நிலையிலேயே திரைக் கதையை அமைத்துள்ளார். இக் கட்டுரை ஒரு விமர்சனக் கட்டுரையல்ல. ஆனால் தமிழ்ச் சமூகம் (இந்திய,புலம் பெயர், மற்றும் மலேசியத் தமிழர்கள்) இப் படத்தை பார்க்க வேண்டியதன் அவசியத்தையே இங்கு முன்வைக்கின்றோம். தொடர்;ச்சியாக இது போன்ற படங்களின் வருகையையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இப் படத்துக்கான படப்பிடிப்பு 2017 கார்த்திகை மாதம் ஆரம்பமானது. கரிகாலன் என தன்னை அடையாளம் காட்டும் ஒரு ஐரோப்பிய தமிழனின் முயற்சியிலேயே இப் படத்தின் தயாரிப்பு ஆரம்பமானது. சுமார் 400,000 கனடிய டொலர்கள் இப் படத்துக்கான முழுமையான செலவு (வட்டி உட்பட). பல நல்ல உள்ளங்களின் பண பங்களிப்பினால் படம் முற்றுமுழுதாக நிறைவடைந்துள்ளது. இதுவரை வந்த ஈழப் படங்களில் மிகச் சிறப்பான படம் என்றால் மிகையாகாது. அதற்காக விமர்சனங்கள் இல்லையென்றில்லை. சிறந்த ஒளிப்பதிவு, கற்பனை வளத்துடன் கூடிய பிண்ணனி இசை (ரகுநந்தன்) போன்றவற்றுடன், ரஞ்ஞிற்றின் மிகச் சிறப்பான இயக்கம் இப் படத்தை சிறப்பாக்கியுள்ளது. சிறையிலிருந்து வெளியே வரும் போராளிகள் திடீரென இறந்து போகின்றார்கள். இது ஏன்? தமிழினி உட்பட பலர் புற்று நோய் போன்ற கொடிய நோய்களாலும் இறக்கின்றனர். இதனையும் இயக்குனர் கேள்விக்குட்படுத்தியுள்ளார். இதனை அவர் நேரடியாக கூறாவிட்டாலும் உணர்வுபூர்வமாக நீங்கள் உணரலாம்.
திங்களன்று ஈகுருவி ஆசிரியருடன், இயக்குனர் ரஞ்ஞிற் யோசப் சந்தித்த போது அவர் கூறியவற்றை அவரது மொழியிலேயே கீழே உள்ளது. இப் படத்தின் வசனம் ஈழத்தின் மிக முக்கிய கவிஞர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் தீபச் செல்வன்.
2
என்னிடம் பிரான்சைச் சேர்ந்த நண்பர் ஒருவர், பெருநிலம் பற்றிய நிலம் சார்ந்த விடயங்கள் பற்றி ஒரு விவரணத் திரைப்படம் எடுத்து தருமாறி கேட்டிருந்தார். அதற்கான நிதியுதவியை தான் வழங்குவதாகவும் உறுதியளிதிருந்தார். அதனையொற்றி தீபச் செல்வனுடன் உரையாடினேன். இப் படத்திலும் ஒரு முக்கிய வசனம் ஒன்று வருகின்றது. ‘பெரு நிலங்களை சிறு நிலங்களாக்கிப்போட்டாங்கள்’ என வரும். அவ்;வாறான ஒரு முயற்சியின் போது எனது கதையொன்றைக் கூறினேன்.
ஒரு போராளி போர் முடிந்து எட்டு வருடங்களின் பின்னர், ஸ்ரீலங்காச் சிறையிலிருந்து வெளியே வருகின்றார். அவர் எதிர்பார்த்ததிற்கு மாறாக ஒரு வன்முறைகள் நிறைந்த சமூகத்தைக் காண்கின்றார். போரின் வடுக்கைளையும், வலிகளையையும் மறந்த சமூகத்தை பார்க்கின்றார். போரின் அழிவுகளையும் மீறி, ஒரு பேரினவாத ஆக்கிரமிப்பினைக் காண்கின்றார்.
இந்த மண்ணுக்கான விடுதலையையும், மண்ணுக்கான இழப்புக்களையும் மக்கள் மறந்து போய்விட்டதையும் அவர் நேரடியாகக் காண்கின்றார். விடுதலையின் பின்னரான அவரது பயணத்தில் அவர் இவையாவற்றையும் காண்கின்றார். இக் கருவை நான் ஐரோப்பாவில் உள்ள தயாரிப்பாளரிடம் கூறினேன்.
படத்தின் கதாநாயகன் முன்னர் ஆண்டவன் கட்டளை படத்தில் உதவி இயக்குனராக இருந்துள்ளார். அவர் லைன் புரடியுசராக இப் படத்தை அறுபத்தைந்தாயிரம் கனடியன் டொலர்களுள் முடிக்கலாம் எனக் கூறினார். நான் இந்தியாவில் கமாராக் கருவிகளை வாடகைக்கு விடும் ஒரு நிறுவனத்தை நடாத்திவருகின்றேன். இதனால் கமராவிற்கான செலவு இதற்குள் அடங்கவில்லை. முதலில் மன்மதன் பாஸ்கியையே கதாநாயகனாக நடிக்க அணுகினேன். வெளிநாட்டுக்காரராக, புலம் பெயர்ந்த தமிழராக முதலில் நாசர் நடிப்பதாக இருந்தார். அவரது திகதிகள் எங்களது திரைப்பட படப்பிடிப்பு திகதிகளுடன் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் இளவரசு நடிப்பதற்கு ஓத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்காக வந்திருந்தார். அவர் படம் முழுவதும் தான் வருவதாக கதையை மாத்துமாறு கூறினார். அதன் பின்னார் சார்லியை கேட்டிருந்தோம். அவருக்கு மிகவும் விருப்பம் இருந்தது. ஆனாhல் அவர் அப்போது அமெரிக்காவிலிருந்தார். இறுதியாக தனஞ்சியன் நடித்தார். இப் படத்தில் நடித்த ஒரேயொரு இந்தியர் இவர். செப்பாகவும் ஒரு உதவி இயக்குனர் நடித்திருந்தார். அவரும் இந்தியர். நாயகன் உட்பட அனைவரும் இலங்கைத் தமிழர்கள். நாயகியாக முதலில் யூலியானா ஜோன்பிலிப் நடிப்பதாக இருந்தது. அவர் வார இறுதிநாட்களில் கொழும்பு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தபடியால், நர்வினி டெரி என்ற டென்மார்க் தமிழ்ப் பெண் நடித்தார். டென்மார்க்கிலிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் வந்து படத்தில் நடித்து தந்தார். யாழினியாக நடித்தவர் லீலாவதி என்ற மலையகக் கலைஞர். இவர் ஒரு நாடக நடிகர்.
நாங்கள் நீர்வேலியில் உள்ள காவேரி கெஸ்ட் கவுஸின் மூன்று கட்டிடங்களையும் வாடகைக்கு எடுத்து, அங்கேயே சமைத்து படப்பிடிப்பை நடாத்தினோம். மொத்தமாக 75 பேர் கொண்ட குழு. 10 நாட்கள் படப்பிடிப்பை நடாத்திய பின்னர், இலங்கை அரசாங்கம் எமது படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டது. முதலில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் கதையைக் கூறி அனுமதி பெற்றிருந்தோம். அப்படியிருந்தும் புலிக்கு ஆதரவான படம் எனக்; கூறி நிறுத்தப்பட்டுவிட்டது. 75 பேர், சாப்பாடு, அறை வாடகை என பல செலவுகள். நாட்கள் நகர்கின்றன. அனுமதிக்கப்படவில்லை. முதலில் ஒரு எம்.பியை அணுகினோம். அவர் தமிழினியின் இறுதிச் சடங்கை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தியது போல் எம்மையும் பயன்படுத்த முயற்சித்தார். படத்தில் யாழினியின் மரணச் சடங்கினை திடீரென வருபவர்கள் பயன்படுத்துவார்கள். அது இவரை மையப்படுத்தியது.

பின்னர் நாங்கள் மனோ கணேசனை அணுகினோம். அவரது ஆலோசனைப்படி நடந்தபோது, இலங்கை அரசு இரு திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரிகளை பார்வையளராக எமது படப்பிடிப்புக்கு அனுப்பியது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தொடங்க முன்னர் அன்றைய காட்சிகளுக்கான விபரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அன்றைய நாள் முடிவில் படப்பிடிக்கப்பட்ட காட்சிகள் அவர்களுக்கு காட்டப்படவேண்டும். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. நாங்கள் படப்பிடிப்பை முடித்த போது மொத்தச் செலவு சுமார் ஒரு கோடியே 35 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தியாவில் திரைப்படக் கலைஞர்களுக்கான கால்சீட் முறைக்கும், இலங்கையில் உள்ள முறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதுவும் எமது செலவிற்கு ஒரு காரணம். படப்பிடிப்பில் வேலை பார்த்த சில முகவர்களின் செலவும் திட்டமிட்டதை விட அதிக செலவிற்கு காரணமாயிருந்தது.

நாசரிடம் இப் படத்தைக் காட்டியபோது, அவர் எப்போ ரஞ்ஞிற் டப்பிங் செய்யப் போகின்றீர்கள் என்றார். நான் கூறினேன் டப்பிங்; செய்யமாட்டோம். படத்தின் மொழி எனக்கு முக்கியம். சென்னைத் தமிழில் வரும் படத்தை இலங்கைத் தமிழர்கள் வரவேற்கின்றார்கள். கோயமுத்தூர் தமிழில் வரும் படத்தை வரவேற்கின்றார்கள். ஏன் இலங்கைத் தமிழில் வரும் படத்தை மட்டும் வரவேற்க தயங்குகின்றீர்கள். ஈழ சினிமாவிற்கான மொழியிலேயே இப் படம் உள்ளது. எக் காரணத்தைக் கொண்டும் படத்தின் உரையாடல் மொழி மாற்றப்படமாட்டாது.
இலங்கையில் சிறையிலிருந்து வெளிவரும் போராளிகளுக்கு, ஒரு தொலைபேசி இலக்கம் கொடுக்கப்படும். அவர்கள் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டால், அவர்களை வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்படும். அதற்கு போராளிகள் வீட்டையோ,நிலத்தையோ விற்கவேண்டி வரும். விடுவிக்கப்படும் போராளிகளை நிலத்திலிருந்து அகற்றப்பட இலங்கை அரசு விரும்புகின்றது. அதற்கான சகல நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றது. ஒவ்வொரு போராளிக்கும் நிலத்தின் முக்கியத்துவம் தெரியும். படத்தில் நாயகன் தனது நிலத்தை விற்க மறுக்கின்றான்.

3.
கத்தியும் கஞ்சாவும் இங்கு இருக்கக் கூடாது என நாயகன் கூறுகின்றான். புலிகளைப் பற்றிப் பேசாதீர்கள், பிரபாகரனைப் பற்றி பேசாதீர்கள், விடுதலையைப் பற்றி மட்டும் பேசுங்கள் என இயக்குனர் ஈகுருவி ஆசிரியரிடம் கூறியிருந்தார். விடுதலை அரசியல் விடுதலை மட்டுமல்ல, வன்முறையிலிருந்து விடுதலை, பொருளாதார விடுதலை போன்ற அனைத்தையும் குறிக்கும். போராளிகள் தமிழினத்தின் எதிர்காலத்தை அங்குள்ள இளம் சந்ததியிடமும், புலம் பெயர் இளம் சந்ததியிடமும் விட்டு விடுகின்றார்கள். அந்த நம்பிக்கையுடன் நாயகன் இறந்து விடுகின்றான். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவார்களா? இது ஒரு கசப்பான எதிர்பார்;ப்பாக இருக்கலாம். இயக்குனர் நம்பிக்கையுடன் படத்தை முடித்துவிட்டு நகர்கின்றார். அதற்கான உரையாடல் இங்கு ஆரம்பமாகின்றது.

 

ஜீவன் ..

01/04/2019

ஏப்ரல் மாத இகுருவி பத்திரிகையில் வெளிவந்தது