சொற்கள் மலர்ந்த காவியங்கள்

விதயன்
கனடாவின் முதன் குடிகள் வாழ்ந்து, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, ஓதுக்கப்பட்ட நன்னிலத்தில், அகதிகளாக தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றோம். எம்மைப் போலவே ஒரு காலத்தில் மட்டுமல்ல இப்பொழுதும் தங்கள் நிலத்திலேயே தங்கள் வாழ்க்கையை தேடும் முதன் குடிகளை நினைவிற்கொள்வோம்.
கனடாவில் வெளிவந்த தமிழ் நூல்களை அறிமுகப்படுத்தும் முயற்சியே இது. பல நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்று வெளியிடப்படுகின்றன. சில அவ்வாறில்லாமல் வெளியாகின்றன. பல நூல்கள் வெளியாகி பல ஆண்டுகளாகின்றன. மறந்து போனவற்றை மறைந்து போகாமல் பதிவு செய்ய வேண்டும்.

முடிவில் ஓர் ஆரம்பம் – சுதா குமாரசாமி

சுதா குமாரசாமி ஒரு சமூகப் போராளி. 1980களின் இறுதியில் ரொரன்ரோவில் விழிப்பு என்ற பெண்கள் அமைப்பின் முக்கிய ஆரம்பகர்த்தா. இவரது படைப்புக்கள் பல சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடுகொண்டவர். கடந்த பல வருடங்களாக அரச- சமூக நிறுவனங்களில் ஆலோசகராக, அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் யோர்க் பிரதேச சமூக நிறுவன அதிகாரியாகவுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு முடிவில் ஓர் ஆரம்பம். இது 1988ல் வெளிவந்தது. இதனை மொன்றியல் வுயஅடை Pசழபசநளள Pரடிடiஉயவழைளெ வெளியிட்டுள்ளது. ரொரன்ரோவில் இருந்த றிப்ளக்ஸ் பிரின்ரிங் அச்சடித்துள்ளனர். நூலிலிருந்து ஒரு சிறு கவிதை
உன் நிழலின்றி
நூலறுந்த பட்டம் போலாவேனோ
வேரறுந்த மரம் போல் தரைசாய்வேனோ?
பொங்கி, குமுறி, போக்கிடம் இன்றி,
கொதித்த எரிமரையாய் வெடிப்பேனோ?
என் கவலையெல்லாம்
தான் வெடித்து சிதிறி-
என்னவர்களையும் நோகடிப்பேனோ?
 
 
சட்ட மாமேதை ஜி.ஜி.பொன்னம்பலம்
நூலாசிரியர் ச.சதாசிவம் (சேவியர்)
சாதிய ஒடுக்குமுறையை வளர்த்தவரும், சாதாரண மக்கள் சுரண்டப்படுவதை ஊக்கப்படுத்தியவரும் ஜி.ஜி என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம்.
நூலாசிரியர் ஜி.ஜிக்கு நெருக்கமானவர். ஜி.ஜியுடன் பல பயணங்களை மேற்கொண்டுள்ளார். தனது அனுபவத்தினூடாக ஜி.ஜின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவிற்கு பதிவு செய்துள்ளார். ஜி.ஜி பொன்னம்பலம் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு சிறந்த வழக்கறிஞருமாவார். இவரது அரசியல் வாழ்வில் இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர். மத்திய கைத்தொழில் அமைச்சர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவர் என பல பதவிகளை வகித்தவர். 50க்கு 50 அதாவது தமிழர்களுக்கு சமவுரிமை வேண்டும் எனக் கேட்டவர்.
  வழக்கறிஞராக பல சாதனைகளை செய்துள்ளார். முன்பு குறிப்பிட்டபடி, சாதாரண மக்கள் சுரண்டப்படுவதை ஊக்கப்படுத்தியவர். இவர் முதலாளிகளுக்காக பல வழக்குகளில் வாதாடி அவர்களை வெற்றி பெறச் செய்துள்ளார். இந் நூலில் வழக்கு விபரங்கள் உள்ளன. குறிப்பாக ‘ஒரு யானைப் பெட்டி வழக்கு’ – விபரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. விலைக் கட்டுப்பாட்டை மீறும் முதலாளிகளுக்கு இவ் வழக்கின் வெற்றி, விலையை உயர்த்தி விற்க ஊக்கப்படுத்தியது. ஒரு புறத்தில் மக்கள் தலைவன், மறு புறம் மக்களுக்கு எதிரானவன். இவர் மட்டுமல்ல பல அரசியல்வாதிகளும் இந்த முரண் நிலையையே வெளிப்படுத்தினார்கள்.
நூலில் பல அரிய புகைப்படங்கள் உள்ளன. ஜி.ஜி.யை புகழும் நூல் இது. நூலாசிரியர் தனது பெயரை நூலின் முற்பகுதியில் தீவகன் சதாசிவம் சேவியர் என பதிவு செய்துள்ளார். 2003ல் இந் நூல் பதிப்பிக்கப்பட்டு;ள்ளது.
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு –வ.ந.கிரிதரன்

இந்நூலை டிசம்பர் 1996ல் சென்னையில் உள்ள ஸ்நேகா பதிப்பகமும், ரொரன்ரோ மங்கைப் பதிப்பகமும் இணைந்து பதிப்பித்துள்ளனர்.
சமூகப் போராளியான வ.ந. கிரிதரன் ரொரன்ரோவில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றார். பல நூல்களை எழுதியுள்ளார். பதிவுகள் என்னும் இணையத்தை சுமார் 25 வருடங்களுக்கு மேலாக நடாத்திவருகின்றார். உலக தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவுகளுக்கு முக்கிய இடமுண்டு. உலக தமிழ் இலக்கியகர்த்தாக்களை இணைக்கும் ஒரு பாலமாக பதிவுகள் செயற்பட்டுவருகின்றது. உலகின் மிக முக்கிய தமிழ் இலக்கிவாதிகள் அனைவரது படைப்புக்களும் பதிவுகளில் வெளியாகியுள்ளது. கனடாவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகளைப் பற்றிய விரிவான பதிவு, பதிவுகளில் பதிவாகியுள்ளது.
வ.ந.கிரிதரன் கட்டிடக்கலை, இலத்திரனியற் பொறியற் தொழில் நுட்பத் துறைகளில் பட்டதாரி. இவரது படைப்புக்கள் இலங்கை-இந்தியாவில் பல சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல படைப்புக்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு. ஒரு கட்டிடக்கலை வல்லுனரால் தான் ஒரு நகர அமைப்பின் முக்கிய விடயங்களை பதிவு செய்ய முடியும். நூலின் பின்பகுதியில் ‘வட்டமும், சதுரமும், வாஸ்து புருசமண்டலமும், இந்துக்களின் நகர அமைப்பும் சாதியம், தென்னிந்திய ஆலய நகரங்கள் ஆகிய அத்தியாயங்கள் மிக முக்கியமானவை. மக்கள் சாதிய அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்பட்டு வாழவைக்கப்பட்டார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது. வடக்கிலும், வடமேற்கிலும் பிராமணர்கள், அரச அதிகாரிகள் வாழ்கின்றனர். தென்மேற்கில் மற்றையவர்கள் வாழ்கின்றனர்.
நல்லூர் நகரின் நகரஅமைப்பை மட்டும் பதிவு செய்யாமல், அந் நகர அமைப்பின் பின்னால் மறைந்துள் சமூக ஒடுக்குமுறையையும் இந் நூல் பதிவு செய்துள்ளது. அவ்வகையில் நல்லூரைப் பற்றி வெளியாகியுள்ள நூல்களில் மிக முக்கியமான நூலிது.
 
இன்னொரு நாளில் உயிர்ப்பேன் – நிலா குகதாசன்

1996ல் நிலா குகதாசன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இளைய நிலா என்ற விடியோ சஞ்சிகை முதலில் நிலா குகதாசன் வெளியிட்டார். இதில் கமராக் கவிதை என்ற சில நிமிட குறும்பட கவிதைகள் விடியோ சஞ்சிகையின் ஒரு அங்கமாக வெளியாகியது. மிகவும் காத்திரமான இவ் விடியோ கவிதைகள் ஆவணப்படுத்தப்படவில்லை. அத்துடன் நின்றுவிடாமல், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். மிகவும் இள வயதில் புற்று நோயிலிருந்து மீண்டெழுந்த பொழுதில் இறந்து விட்டார். இறுதி வரை நம்பிக்கையுடன், புத்தகங்களுடன் வலம் வந்தார்.
இன்னொரு நாளில் உயிர்ப்பேன் கவிதை நூலிலிருந்து சில கவிதைகள்
என் துப்பாக்கி நண்பனுக்கு
முன்பெல்லாம் நீ
மனிதர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாய்
இப்போது
மரணங்களைப் பற்றி மட்டுமே
பேசிக்கொண்டிருக்கிறாய்!
முன்பெல்லாம் உன் துப்பாக்கி
உனது சொல்லுக்கு செவிமடுத்தது
இப்பொழுது துப்பாக்கியின் சொல்லுக்கு
நீ அடிமையாகிவிட்டாய்
உன் மௌனத்தையும் சம்மதாக வைத்து
மரணங்கள் ஆட்சி நடத்துகின்றன
_____________
எங்கள் தாய் நாட்டில்
புழுதி மணல்கள், புல் பூண்டுகள்
தட்டி வேலிகள் எல்லாம் ரத்தத்தில் குளித்தாலும்
எங்கள் குறி எப்போதுமே
டொலரில் தான்
———————————–
இக் கவிதை நூலுக்கு முன்னுரையை கவிஞர் அ.கந்தசாமி எழுதியுள்ளார். இக் கவிதை நூலில் உள்ள கவிதைகளை வாசிக்கும் பொழுது, நிலா குகதாசன் உயிர்ப்புடன் எம்முடன் வாழ்கின்றார்.