20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் குறித்த விசாரணைகள் இன்று ஆரம்பம்!

20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

ஐந்து பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.

அதனடிப்படையில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் சிசிர த ஆப்ரோ ஆகியவர்கள் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,  குறித்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தல்கள் ஆணைக்குழு அங்கத்தவர் ரத்னஜீவன் ஹூல், சட்டத்தரணிகள், அமைப்புக்கள் அடங்கலாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 10 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22 ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20ஆவது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.