கொரோனா தொற்று பரவும் அனர்த்தம் குறைவடையவில்லை

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களினால் கொவிட் – 19 தொற்று நாட்டுக்குள் பரவும் அனர்த்தம் குறைவடையவில்லை என்று தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அனைவரும் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொவிட் தொற்று தாக்கம் இருப்பதை காணமுடிகின்றது.

அனைத்து நாடுகளில் இருந்தும் இலங்கை வருவோருக்கு இந்த தொற்று இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நோய் சமூக பரவலாக காணப்படவில்லை. இருப்பினும் நாட்டுக்குள் கொவிட் தொற்று பரவுவது குறைவடையவில்லை.

எம்மை மீறிய வகையில் இந்த நோய் தொற்று அனர்த்தம் இடம்பெறுமாயின் அதாவது சமுகத்தின் மத்தியில் கொவிட் தொற்றாளர் ஒருவர் இருப்பாராயின் அது சமூக பரவலாக மாறக்கூடும் என்றும் தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்தார்.