“தமிழீழம் சாத்தியமில்லை” ஏன்?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். அவர்கள் ஒரு முகவரியற்ற மக்கள் கூட்டம். உலக வரைபடத்தில் தங்களிற்கென்றொரு தேசம் வேண்டும் என்ற பெரும் கனவோடு அலைந்து திரிகிறார்கள்.  ஒரு நாள் ஒரு சூதாட்ட விடுதியில் தியோடர் கெர்சில் (Theodor Herzl) என்பவரின் தலமையில் சில இளைஞர்கள் ஒரு இரகசிய திட்டம் தீட்டுகிறார்கள்.

யூத தேசிய நிதி (Jewish National Fund) என்ற ஒரு நிதிக்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். பலஸ்தீன பகுதிகளில் உள்ள வரண்ட நிலங்களை விலைக்கு வாங்குகிறார்கள்.

யூத தேசிய நிதியம் பாலைவன பூமியில் 250 மில்லியன் மரங்கள், 180 அணைகள், 1000 பசுமைப் பூங்காக்கள் என்ற பெரும் இலக்குநோக்கி வேகமாக இயங்குகிறது. பாலைவனத் தேசம் பசுமைத் தேசமாக மாறுகிறது.

சிறிது காலத்தில் வாங்கிய நிலம் எல்லாவற்றையும் இணைக்கிறார்கள். அதுவரை அலட்சியமாக இருந்த பலஸ்தீனியர்களுக்கு அப்போதுதான் புரிகிறது தம் தேசத்தின் நெஞ்சைப்பிளந்து யூதர்கள் தமக்கென்றொரு தேசம் அமைக்கிறார்கள் என்று.

தொடர்ந்து மோதல்களும் கொலைகளும் நடக்கின்றன. கிட்லர் போன்றவர்களின் கோபத்திற்கும் ஆளாகி ஆறு மில்லியனிற்கும் அதிகமானவர்ளையும் பலிகொடுக்கிறார்கள்.

இத்தனைக்கு மத்தியிலும் இலக்கு தவறாமல் தொடர்ந்து நடக்கிறார்கள். உலக வரைபடத்தில் 1948 முதல் இஸ்ரேல் என்றொரு தேசம் அடையாளப்படுத்தப்படுகிறது. முகவரியற்ற யூத மக்களிற்கு இஸ்ரேல் என்றொரு முகவரி வருகிறது.

இப்படி கற்பனை செய்வதற்குக்கூட கடினமான விடயத்தை சாத்தியமாக்கியதற்கு அடிப்படையானது என்னவென்று உலகமே வியந்து பார்க்கிறது.

ஆனால் பதிலோ மிகவும் இலகுவானது. அவர்களின் அறிவு. அவர்களின் நம்பிக்கை எண்ணம். அவர்களின் எண்ணம்தான் இத்தனைக்கும் அடிப்படை. அறிவால் பணத்தையும், பணத்தாலும் அறிவாலும் நிலத்தையும் வென்றெடுத்தார்கள்.

நீ என்னவாக வரவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை உன் எண்ணம்தான் தீர்மானிக்கின்றது. எண்ணங்களே செயல்வடிவம் பெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் எண்ணங்களே செயல்களை பிறப்பிக்கும் பிரம்மாக்கள் என்கிறார்கள் மகான்கள்.

இந்த எண்ணங்களை ஒரு தாய் கருவுற்றிருக்கும்போதே ஒவ்வொரு யூதனிற்குள்ளும் விதைக்கும் வித்தைதான் எல்லா அசாத்தியங்களையும் அவர்களுக்குச் சாத்தியமாக்கி வருகிறது. உலகில் அதிகப்படியான அறிவியலாளர்களாகவும் வல்லுனர்களாகவும் வசதிபடைத்தவர்களாகவும் அவர்களை ஆக்கிவருகிறது.

தாயின் கருவில் இருக்கும் குழந்தை இசையை ரசிக்கின்றது. இசைகேட்டு அசைகின்றது. என்பதையெல்லாம்  விஞ்ஞானம் நிரூபித்தது அண்மையில்தான்.

ஆனால் யூதர்கள் இதை எப்போதோ அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள். குழந்தை கருவில் இருக்கும் போதே போதனை தொடங்கிவிடுகிறார்கள். தம் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்க ஆரோக்கிய உணவு, சிறந்த நூல்கள் வாசித்தல், கணிதப்; புதிர் அவிழ்த்தல், நல் இசை கேட்டல் என பல வழிமுறைகளை கரு உண்டான காலம் முதல் பின்பற்றுகிறார்கள். தம் எண்ணத்தையும் இலக்கையும் கருவில் வைத்தே குழந்தைக்கு விதைத்துவிடுகிறார்கள்.

அது பிறந்து வளர்ந்து அவற்றைக் காவிச்செல்கின்றது. அத்தகைய எண்ணங்கள்தான் பரம்பரை பரம்பரையாக உயிர்க்கலங்களில் கடத்தப்பட்டு அவர்களை ஒரு உயிர்ப்புள்ள இனமாக அசாத்தியப்பிறவிகளாக மீண்டும் மீண்டும் பிரசவித்துக்கொண்டிருக்கிறது.

இனி இவ்வளவும் எழுதக் காரணமான விடயத்திற்கு வருகிறேன்.

கடந்தவாரம் ஒரு பொழுதுபோக்கு வானொலியில் நீங்கள் ஒரு நாள் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்றொரு கேள்வி கேட்கப்படுகின்றது.

வழக்கமாக திரையிசைப்பாடல்களை விரும்பிக்கேட்கும் நேயர்கள் பலரின் பதில் தமிழீழத்தை அங்கீகரிப்பேன் என்பது.

அதேபோல் கடந்த மாதம் கிளிநொச்சியில் நடந்த விளையாட்டுப்போட்டியில் இல்லம் ஒன்றின் நுழைவாயில் அலங்காரம் தமிழீழமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்தவாரம் அதே மஞ்சள் நிற தமிழீழ அலங்காரம் மட்டக்களப்பில் நடந்த மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்திலும் இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவங்கள் எழுமாற்றானவை. மிகச்சிறியவை. ஆனால் தமிழீழம் சாத்தியம் இல்லை என்ற கருத்தை ஒரு புறமிருந்து பரப்ப ஆரம்பித்திருக்கும் நேரத்தில் தன்பாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஏன் நடக்கின்றன? எவ்வாறு நடக்கின்றன என்ற கேள்விகளோடு ஒரு இளைய தலைமுறைப் பிள்ளையோடு பேச ஆரம்பித்திருந்தேன். அந்தப் பிள்ளை பேசிய பதில்தான் எனக்கு ஆச்சரியத்தையும் இந்தப் பதிவை எழுதவும் தூண்டியது.

அவர் ஈழத்தில் தினசரி குண்டுத்தாக்குதலுக்குள்ளாகும் பதுங்குகுழிப் பள்ளி வாழ்க்கையில் தன் கல்வியை ஆரம்பித்து புலம்பெயர் தேசத்துப் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டமேற்படிப்பை முடித்திருக்கும் இளையவர்.

வெளித்தோற்றத்துக்கு ஒவ்வொருவரும் வித்தியாசமாக தோன்றினாலும் வேறு எதை எதையோ பேசினாலும் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இலக்கு. அது அவர்களின் மரபணுக்களில் எழுதப்பட்டு ஆழ்மனதில் நிலைகொண்டிருக்கிறது.

பிரிந்து செல்லுங்கள் என மலேசியத் தலைமை அமைச்சர் சிங்கப்பூரைத் தனி நாடாக்கியது போலவோ, ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்புக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுபோலவோ ஏதாவது ஒரு சந்தர்ப்பம் என்றோ ஒரு நாள் வரும் அல்லது நாம் உருவாக்குவோம். அதை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணங்கள் பற்றியெல்லாம் பேசினார்.

வலிமையான கோரிக்கையொன்று முறையாக விதைக்கப்பட்டுவிட்டால் அது தன் இலக்கை அடையும் வரை யாராலும் அடக்கி அழித்துவிடமுடியாது. அந்த விதைகள் தான் ஈழமண்ணில் நாம் இத்தனைநாளும் விதைத்தவை. அவை எந்த அசாத்திய சூழ்நிலையிலும் உயிர்வாழும் என்பதை வெளிப்படுத்தும் செயற்பாடுகளே இச்சம்பவங்கள் என்றார்.

ஆனால் அதற்கு முதல் எங்களை தோற்கடித்துவிடவேண்டும் என்பதுதான் தமிழீழம் சாத்தியமில்லை என்ற கருத்தை பரப்ப நினைப்பவர்களின் திட்டம். அதற்கான ஒரே வழி நாம் தோற்றுவிட்டோம் என்று எங்களையே ஒப்புக்கொள்ள வைப்பது. தமிழீழம் சாத்தியமில்லை என்று எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொள்ள வைப்பது.

இன்னும் சொல்லப்போனால் எங்களை தோற்கடிப்பதற்கான ஒரே வழியும் இறுதி யுத்தமும் நாம் தோற்றுவிட்டோம் என்றும் தமிழீழம் சாத்தியமில்லை என்றும் கட்டமைத்து வளர்க்க முற்படும் உளவியல் போர்தான் இப்போது தீவிரப்படுத்த ஆரம்பிக்கப்படுகிறது என தொடர்ந்தார்.

அரசியல் அணுகுமுறைக்கு பல தெரிவுகள் இருக்கும். ஆண்டாண்டுகால வேட்கை என்பது எப்போதும் ஒரே தெரிவுதான். அரசியல் அணுகுமுறை அனேகமாக இறுதிக் களமுனையின் முடிவில் இருந்து ஆரம்பிப்பது. பல சமயங்களில் ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒரு பரீட்சார்த்த முயற்சியாவே தலைவர்களால் கைக்கொள்ளப்படும்.

ஆண்டாண்டு கால வேட்கை என்பது மக்களின் தொடர் முயற்சி. அது எத்தனை களமுனைகளில் வென்றாலும் தோற்றாலும் இறுதி இலட்சியத்தில் வெல்வது என்பது.

இன்றைய சூழலில் “தமிழீழம்” பேசுவது யதார்த்தத்துக்கு ஒத்துவராததாக இருக்கவோ சொல்லப்படவோ கூடும். அதற்காக பேசாமல் இருந்துவிடமுடியாது.

தமிழீழம் என்ற பெருங்கனவுபற்றி மக்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களால் உரத்துப் பேசமுடியாச் சூழல் இல்லாவிட்டாலும் யூதர்கள் போல் கருவிருக்கும் குழந்தைகளோடும் அருகிருக்கும் நண்பர் உறவினர்களோடும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்களை ஒருவராலும் தோற்கடிக்க முடியாது உங்கள் நம்பிக்கையில் நீங்கள் தோற்கும் வரை. ஒருவன் நான் தோற்றுவிட்டேன் என்று ஒப்புக்கொள்ளாதவரை ஒவ்வொரு தோல்வியும் அவனுக்கு வெற்றிக்காண முதலீடுதான்.

காலம் மாறும். காட்சிகள் மாறும். தலைவர்கள் வந்து செல்வார்கள். எல்லாம் கடந்து போகும். கனவு மட்டும் எப்போதும் மாறாது.

“தமிழீழம்” அடக்குமுறையில் இருந்து விடுதலைபெறுவதற்கு மட்டுமல்ல ஐம்பதினாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் நிலைத்த இருப்பிற்கும் நீடித்த வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. தமிழீழ தேசம் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வழியில் தன் விடுதலையை அடைந்தே தீரும் என்று பேசி முடித்தார்.

இனி நான் பேச என்ன இருக்கிறது? வாயடைத்துப் போய் நின்றேன். அந்தப் பிள்ளையின் முகத்தில் பெருங்கனவோடு திரிந்த தியோடர் கெர்சில் (Theodor Herzl) தான் எனக்குத் தெரிந்தார்.

– இந்திரன் ரவீந்திரன்

 

சாவகச்சேரி அம்மனுக்கு 18 / பெப் 2016 அன்று அலங்காரம் 

. இந்நிகழ்வு கட்டுரையாளர் எழுதியபின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம்

புகைப்பட உதவி : Nadarajah Sanjeev