மொழிப் போராளி செல்லையா கோடீஸ்வரன்

மொழிப் போராளி செல்லையா கோடீஸ்வரன்
ரேவதி-யாத்ரீகா

கோடீஸ்வரன் கடந்த 15ந் திகதி காலமாகிவிட்டார். ஒரு சாதாரண மரணச் செய்தியாக கடந்து செல்ல முடியாது. காரணம் ஒரு எழுதுவினைஞராக இலங்கைத் தமிழருக்கு வழக்கமான ஒரு தொழிலை இவர் மேற்கொண்டிருந்தார். வருடா வருடம் பணவீக்கத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வுகள் வழங்கப்படும். அதுவும் சாதாரணமாக ஒவ்வொரு வருடமும் கடந்து போகும் நிகழ்வு. ஆனால் 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் கோடீஸ்வரனின் ஊதிய உயர்வுக்கு பங்கத்தை ஏற்படுத்தியது. அரச ஊழியர்கள் சிங்களத்தில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றது புதிய சட்டம். கோடீஸ்வரன் சிங்களத்தில் தேர்ச்சி பெறவில்லை. எனவே ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இங்கு தேர்ச்சி பெறவில்லை என்பதனை விட கோடீஸ்வரன் தேர்வு எழுத மறுத்து விட்டார்.
இவரும் சிவனானசுந்தரம், பாலசுப்பிரமணியம், சோமசுந்தரம், ஆடியபாதம், அரச எழுதுவினைஞர் சங்கத்தை உருவாக்கினர். கோடீஸ்வரன் அதன் முதல் தலைவரானார். இச் சங்கத்தின் பிண்ணனியில் தமிழரசுக் கட்சி செயற்பட்டது.

கோடீஸ்வரன் என்ன நினைத்தாரோ, ஒரு கை பார்ப்போம் என நினைத்து சட்டத்தை நாடினார். சட்டமே கூறுகின்றது சிங்களத் தேர்ச்சி அவசியம். ஆந்தச் சட்டத்துக்கு எதிராகவே வழக்காடினார். அப்போது இலங்கை குடியரசாகவில்லை. எனவே சோல்பரியினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் யாப்பு சிறுபான்மையினத்தவரை ஒரு வகையில் பாதுகாக்கின்றது. அப்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் உள்ளூர் நீதிபதி The District Judge, O L De Krester)  மாவட்ட நீதிபதி என்பார்கள், அவர்கள் வழக்கை விசாரித்து கோடீஸ்வரனுக்கு சார்பாக தீர்ப்பை சித்திரை 24,1964ல் வழங்கினார். ஷரத்து 29க்கு எதிராகவே இத் தீர்ப்பு அமைந்திருந்தது.

இது 1964ல் நடைபெற்றது. ஸ்ரீமாவே பண்டாரநாயக்காவின் முதற் தடவையாக உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பட்டத்துடன் அரசாட்சி செய்கின்றார். விடுவாரா ஸ்ரீமாவே, மேன் முறையீடு செய்தார். மேன் முறையீடுகள் எப்பொழுதுமே அரசுக்கு சார்பாக தீர்ப்புச் சொல்லப்படும். கோடீஸ்வரனுக்கு எதிராகவே தீர்ப்பளிக்கப்பட்டது. கோடீஸ்வரனும் விடுவதாக இல்லை. அவர் மேன்முறையீடு செய்தார். இம் முறை வழக்கை விசாரித்தது இங்கிலாந்தில் உள்ள The Privy Council. இதன் தீர்ப்பு மார்கழி 11, 1969ல் வழங்கப்பட்டது. தீர்ப்பு அப்போதைய டட்லி அரசுக்கு பெரும் தலையிடியாகவிருந்தது. ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்ரீமாவால் தொடங்கப்பட்டது என்ற வகையில் டட்லிக்கு உள்ளூர ஒரு சந்தோசமும் இருந்தது. தீர்ப்பு கோடீஸ்வரனுக்கு சாதகமாக வழங்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றம், அரசஅமைப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய மறுத்தது. ஆனால் The Privy Council தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

1970 தேர்தலில் ஸ்ரீமாவே அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தார். விளைவு இலங்கை குடியரசு நாடாகியது. The Privy Council தீர்ப்புக்கு எதிராக அரச சட்டமைப்பு மாற்றஞ்செய்யப்பட்டது.

1964ல் கோடீஸ்வரனுக்கு ஆதரவாக வாதாடியவர் முதிருச்செல்வம்.  1965ல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தது. தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியது. மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சரானார். அரசு மாவட்ட சபைகள் தரப்போகின்றது. அரசுடன் நல்லெண்ணத்தில் இருக்க வேண்டும். எனவே மொழிவாரிப் பிரச்சினையை கைவிட வேண்டும் எனக் கூறி கோடீஸ்வரன் மேன்முறையீடு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது. ச.இரங்கநாதன் என்ற சட்டமேதை இவ் வழக்கை தொடர்ந்து கோடீஸ்வரனுக்கு ஆதரவாக வாதாடினார். இவருடன் சு.சர்வானந்தா, வில்லியம், மாணிக்கவாசகர் அன்டர்வூட், குரோசட் தம்பையா ஆகியோர் இணைந்து வாதாடினர்.

மு.திருச்செல்வம் பின்னர் ஸ்ரீமா அரசால் நியமிக்ப்பட்ட குழுவில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் இணைந்து செயற்பட்டார். அவர்கள் சிங்கள தேர்ச்சியின்றில், வேலை நீக்கலாம் என பரிந்துரைத்தது.

கோடீஸ்வரன் ஒரு வழக்கறிஞருமாவார். இவர் பிற்காலத்தில் லண்டனிலும் சில காலம் வாழந்;திருந்தார்.
தமிழ்த் தேசிய போராட்டத்தில் கோடீஸ்வரனுக்கு முக்கிய பங்குண்டு. முதற்தடவையாக மொழிரீதியான ஒடுக்கு முறைக்கு எதிராக போராடியவர். அவரது மறைவுக்கு தமிழருக்கு பேரிழப்பாகும்.

https://www.casemine.com/judgement/uk/5b2897cf2c94e06b9e19b863