தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும்

தேசியத்தின் பெயரால் .. பதுக்கப்பட்ட சொத்துக்களும் பதுக்(ங்) கியவர்களும்

தமிழீழ விடுதலைக்காக சேகரிக்கப்பட்ட பொது மக்களின் பணம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. தேசியத்தின் பெயரால் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடந்தது என்ற விவாதம் 2009 முதல் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்னர் ரொரன்ரோவில் நடைபெற்ற நாடு கடந்த அரசாங்கத்தின் நிகழ்வின் போது உலகத் தமிழர் அமைப்பின் முன்னாள் தலைவர் ரெஜி அவர்கள் ஊடகவியலாளர் கிருபா கிரிசனுக்கு வழங்கிய நேர்காணலின் போது  முக்கியமான சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அல்லது எதிர்வினையாற்றும் வகையில் கனேடிய  தமிழர் தேசிய அவையின் பேச்சாளர் தேவா சாபபதி அவர்கள் தளிர் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்த இருவரது கருத்துகளுக்கும் இந்த கட்டுரையில் பதிவு செய்யப்படுகின்றன.தேசியத்தின் சொத்துக்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலம் பொருந்திய அமைப்பாக மாறியதில் முக்கிய பங்கினை புலம்பெயர்ந்த சமூகம் வழங்கிய பொருளாதாரப் பங்களிப்பு கொண்டிருந்ததாக  பலரும் கருதுகின்றனர். எனினும் அந்த கருத்துடன் இந்த கட்டுரையாளர் உடன்படவில்லை.
விடுதலைப் புலிகளின் வளர்ச்சி என்பது அங்கு தங்கள் உதிரத்தை சிந்தி இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தினால் கட்டியெழுப்பப்பட்டது.
அவர்களின் தியாகங்களின் முன்னால் புலம்பெயர்ந்த சமூகம் அனுப்பி வைத்த டொலர்களும். பவுண்சுகளும் , யுரோக்களும் மதிப்பிழந்து விடுகின்றன.
ஆனாலும் விடுதலைப் போராட்டதின் போக்கினை மாற்றிய சாதனைகளுக்கு புலம்பெயர் சமூகத்தின் உதவி இன்றியமையாததாக இருந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் இங்குள்ள சிலர் கருதுவதும் பேசுவதும் போல் நாம் அனுப்பி பணத்தில் தான் அங்கே புலிகள் போராடினார்கள் என்பதெல்லாம் பேதமையின் உச்சம்.
புலம் பெயர்ந்த சமூகத்தில் உள்ள பலரும் தமிழீழ தேசிய விடுதலையை உளமார விரும்பினார்கள் எமக்கான தேசத்தை மீட்டெடுப்பதற்கு எமது உறவுகள் மீது காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன அடக்குமுறையை அறுத்தெறிவதற்கும் விடுதலைப் போராட்டத்தை தமது தோள்களின் தூக்கிச் சுமந்தார்கள். இரவு பகல் பாராது தமது சுய நலன்களை நோக்காது விடுதலைக்காக உழைத்த பலரை இந்த புலம்பெயர் சமூகம் கண்டிருக்கின்றது.
காலம் உருண்டோடிய போது கட்டமைப்பு மாற்றங்கள் புதிய முகங்களை தேசியத்தின் பெயரால் புலம்பெயர் சமூகத்தில் அறிமுகம் செய்தது.
முன்னர் இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட புதியவர்கள் முன்னிலைப்படுத்தபடுகின்றனர்.
புலம்பெயர் நாடுகளில் விடுதலையின் பெயரால் பல செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன பல மில்லியன் டொலர்கள் மக்களிடம் இருந்தும் வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் திரட்டப்பட்டன .
தமிழீழ தனியரசு ஒன்று உருவாகும் போது அதற்கான பொருளாதார பலமாக புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்பு முள்ளிவாய்கால் பேரவலத்துடன் சிதைந்தளிந்து போயிருக்கின்றது என்பது கசப்பான உண்மை.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்பதற்காக தேசியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட  சமூக அமைப்புகள், ஊடகங்கள், ஆலயங்கள். வணிக நிறுவனங்கள் அனைத்தும் இப்போது தனிநபர்களின் ஆளுகைகளுக்குள் சென்றுள்ளமை காலத் துயரம் அன்றி வேறொன்றுமில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத்தில் இருந்த குறைபாடுகள் அல்லது தூரநோக்கற்ற தன்மைகள் காரணமாவே இந்த  நிலை புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்டிருக்கின்றது.
தமது கட்டுப்பாடு இழக்கப்படாது என்ற நம்பிக்கையில் தொலைக்கட்டுபாட்டு இயங்கு பொறிமுறை மூலம் செயல்படுத்தப்பட்ட புலம்பெயர் தேசத்தின் கட்டமைப்புகள் முள்ளிவாய்கால் முடிவோடு தாயகத்தில் இருந்தான தமது கட்டுப்பாட்டை இழந்தன. இதனால் நூலறுந்த பட்டம் போல் தமக்கான திசை வழிகளில் அவர்கள் பறக்கத் தொடங்கினார்கள். தயாகம், தேசியம் போன்றவை எல்லாமே காற்றில் பறந்து தொலைந்து காணமல் போயின.
இது தமிழ் சமூகமாக எமக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு சமூகமாக நாம் மீண்டெழ முடியாத நிலையினையும் அது ஏற்படுத்தியிருக்கின்றது.
தேசியத்தின் சொத்துக்கள் ஏன் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் ?
தேசியத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தி  நிலையே யுத்தத்தின் பின்னரான தயாகத்தின் மீள் கட்டுமானத்திற்கு புலம்பெயர் சமூகத்தின் ஒன்று திரண்ட ஆதரவுத் தளத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு காரணம்.
தமிழ் மக்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்ங்களுக்கும் எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் எமது இனம் சந்தித்த இன அழிப்பிற்கும் எதிரான குரலாக புலம்பெயர் சமூகத்தின் குரல் ஒலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விடுதலையின் பெயரால் நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களில் சிலர் வளமான வாழ்வினை மேற்கொள்கையில் விடுதலைப் போருக்காக தமது வீட்டை  விற்று தாலியை விற்று பணம் கொடுத்தவர்கள் நடுத்தெருவில் நிற்பதால் தோன்றிய ஆதங்கத்தை எதைக் கொண்டும் ஆற்ற முடியாது.
கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்ட  ரெஜி அவர்களும் தேவா அவர்களும் பொதுமக்களின் பணம் முறை கேடாக சிலரால் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் அந்த சிலர் யார் என்பது  குறித்தோ அதற்கான ஆதாரங்கள் குறித்தோ வெளிப்படையாக பேச முயடியாதபடிக்கு அவர்களும் ஏதோ ஒன்றால் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இவர்களைப் போலவே இன்னும் சிலரும் தேசியத்தின் சொத்துக்கள் குறித்தான தமது ஆதங்கங்களை தமக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தி வருகின்றாரகள்;. ஆனால் இவ்வாறான கருத்து வெளிப்பாடுகாளல் இந்த சொத்துக்களை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது.
தேசியத்தின் சொத்துக்களை மீட்பதற்கு என்ன வழி ?
இந்த விடயம் குறித்த ஒரு பொது மக்கள் சந்திப்பினை நடத்தி அதன் ஊடாக இதுவரை  நடந்த விடயங்களையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடயங்களையும் தெளிவு படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.
ஆனால் இதற்கு எவரும் தயாரில்லை என்பதும் இது ஏன் என்பதும் எவருக்கும் புரியவில்லை. சில விடயங்களை பொதுவெளிக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள்  முன்வரவேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாகவே முன்வைக்கப்பட்டு  வருகின்றது. அவரிடம் அது இருக்கின்றது இவரிடம் இது இருக்கின்றது இது தேசியத்தின் சொத்து என்பதான் சொல்லாடல்கள் மட்டுமே எமக்கு கேட்கின்றன ஆனால் அவற்றை உறுதிப்படுத்தும் வல்லமை மிக்கவர்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாகவே இருக்கின்றார்கள்.
இந்த சொத்து விபரங்களை இதுவரை எவரும் வெளிப்படையாக ஆதாரங்களோடு வெளிப்படுத்தவில்லை. அவ்வாறான ஒரு விடயம் இதுவரை சாத்தியமாகவில்லை. இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படாவிட்டால் அதன் தாக்கம் ஒட்டு மொத்தமாக தமிழினத்திற்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
சிலர் வெளிப்படையாகவே தலைவர் வரட்டும் கணக்கு காட்டுகின்றோம் என்று ‘தில்லாக’ கூறித் திரியும் நிலையை  தொடர்வதற்கு இது வாய்பினை ஏற்படுத்தி விடும்.
இறுதி யுத்தத்தின் போது எல்லாவற்றையும் அவர்களுக்கே அனுப்பி விட்டோம் எங்களிடம் எதுவும் இல்லை என்று வெறும் கைகைளை காண்பிக்கின்றவர்களையும் நாம் நம்ப வேண்டிய துர்பாக்கிய நிலையினையும் இது எமக்கு ஏற்படுத்தி விட்டுள்ளது.
எது உண்மை எது பொய் என்று தெரியாத சூனிய வெளிக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டு நிற்கின்றது.
உண்மையான நிலைமைகளை தெரிந்த பலரும் தமக்கேன் வீண் வம்பு என்று தமது சோலிகளை பார்க்கத் தொடங்கி விட்டுள்ளார்கள்.
விடுதலைப் போரின் பெயரால் தங்கள் பொருளாதாரத்தைத் தொலைத்தவர்களும் அவை அறவிடமுடியாக் கடன் என்ற கணக்கில் அவற்றை போட்டு விட்டு கடந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
அதனையும் தாண்டி தாம் பணம் கொடுத்தவர்களை கேள்வி கேட்க முயன்றவர்கள் ‘பயங்கரவாதிகளுக்கு’ உதவினீர்கள் என்று காவல்துறையில் காட்டிக் கொடுக்கப்படுவீர்கள் என்ற அச்சுறத்தலால் பயமுறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறுகின்றன.
விடுதலைப் புலிகள் மீதான தடையும் தேசியத்தின் சொத்துக்களும்
யுத்தம் முடிவடைந்த 10 ஆண்டுகள் நெருங்கும் தருணத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை பலம்பெயர் நாடுகளில் நீக்குவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படாமல் இருப்பதன் பின்னணியும் கூட சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் பணம் கொடுத்தவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாசல்கள் திறக்கும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. அவ்வாறு ஒரு நிலை உருவானால் பொதுச் சொத்துக்களை பதுக்கியவர்கள் சட்டத்திற்கு பதிலளிக்கும் நிலை உருவாகும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து வெளிப்படையான உரையாடல்களை நடத்துவதற்கும் விடுதலையின் பெயரால் சேகரிக்கப்பட்டு தனி நபர்களால் உரிமை கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டமைப்புகளை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று இடைக்கிடை சில குரல்கள் கேட்கும். பின்னர் அவையும் காணமல் போய்விடும்.

தேசியத்தின் சொத்துகளுக்கான பொது நிதியம் ஒன்று சாத்தியமா ?
பொது மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் பொது நிதியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அதனை நிர்வகிப்பதற்கான சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அது வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழக் கூடிய தமிழ் சமூகத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை  அது வழங்க வேண்டும்.
எமது தயாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அது பங்களிப்பை வழங்க வேண்டும்.
குறிப்பாக எமது தாயகம் எதிர் கொண்ட சவால்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த சரியான ஆதாரங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுவரை காலமான விடுதலைப் போர் ஏற்படுத்திய அவலங்கள் , நாம் இழந்த உறவுகளின் எண்ணிக்கை என்ன, மாவீர்களாய் மடிந்தவர்;, காணமல் ஆக்கப்பட்டவர்கள், அங்கவீனமானவர்கள், உளவியல் பாதிப்புக்களுக்கு உட்டபட்டவர்கள் என ஏராளமான தகவல்கள் எவையும் இதுவரை திரடப்படவில்லை.
எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை.
புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு இருப்பது போன்ற வரலாற்று காப்பகங்களோ, அருங்காட்சியங்களோ எமது சமூகத்திற்கு இல்லை.
எமது தமிழ் சமூகத்தின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடியதான ஒரு சமூக நிலையம் கூட இல்லை.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளுடன் ஒரு சமூகமாக நாம் பேரம் பேசக் கூயடிதான எந்த ஒரு கட்டமைப்பும் இல்லை.
இத்தனை  இல்லைகளுக்கும் காரணம் எமது தமிழ் அமைப்புகள் மீதான நம்பிக்கைகளை மக்கள் இழந்து வருவது தான்.
தமிழர் அமைப்புகள் யாரால் யாருக்கா ?
கனேடிய தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் தேசிய அவை, நாடு கடந்த அரசாங்கம் என்று பெயர் சொல்லும் அமைப்புகள் உருவான போதும் இங்கே செயல்பட்டு வருகின்ற  போதிலும் , ஏன் இந்த கேள்விகளுக்கு எங்களால் பதில் காண முடியாமல் போகின்றது.
அல்லது ஏன் இந்த விடயங்களை இந்த அமைப்புகள் நடைமுறைப்படுத்த தவறுகின்றன என்ற கேள்வியும் எழுகின்றது.
இவற்றை ஏற்படுத்துவதற்கு வெளிப்படைத் தன்மையும் நம்பிக்கையும் கொண்ட ஒரு பொதுவான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம். அந்த அமைப்பு பொறுப்பு கூறல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தமிழ் சமூகத்தின் சகல மட்டத்திலும் உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி சமூக நோக்கில் செயல்பட வேண்டும்.
தனி மனிதர்களை முன்னிலைப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒரு தமிழ் சமூகமாக நாம் முன்னேறுவதற்கான ஏற்பாடுகளை அது மேற்கொள் வேண்டும்.
பொது மக்களின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து வெளிப்படைத் தன்மையோடு அவற்றின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். வரவு செலவுத் திட்டங்கள் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும் தீர்வுக்கான வழிகளும்
சமூகத்தின் குரல்களை கேட்பதற்கான பொறி முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த குரல் சகல தரப்புகளையும் சென்றடைவதற்கான ஏது நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தேசங்களில் தமிழ் சமூகமாக நாம் எதிர் கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளை தேடும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ் மூதாளர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், குடும்ப வன்முறைகள், இளம் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள், உள வள ஆற்றுப்புடுத்தலுக்கான தேவைகள், போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சிகள் என பல விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த பணிகளை  முன்னெடுப்பதற்கு  ஆளுமை கொண்ட எமது இளம் சமூகம் முன் வரவேண்டும். இதனை சரியான வழியில் கொண்டு செல்லும் தலைமைத்துவங்களை நாம் அடையாளம் காண வேண்டும். தன்னலமற்று சமூக நோக்கில் எம்மை சரியாக வழிநடத்தக் கூடிய தலைவர்கள் எமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும்.
தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக் கொண்டு முன்னெறுவதற்கு அது ஒன்று தான் மார்க்கம்.
அதனை விடுத்து அவர் எடுத்தார் இவர் மறைத்தார் என்று ஏட்டிக்கு போட்டியான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருப்பதால் ஆகிவிடப் போவது  ஒன்றும் இல்லை.
இப்போது எங்கள் முன்னுள்ள மிகப் பெரிய கேள்வி இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது ? என்பத மட்டும் தான்.

தமிழர் அமைப்பின் முன்னாள் தலைவர் ரெஜி

 நான் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன். 2003 ஆம் ஆண்டு மட்டும் நான் உலகத்தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளராக  இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் நிர்வகித்த சொத்துக்களை ஓரளவுக்கு எனக்கு தெரியும்.  ஓரளவுக்கென்ன, முழமையாக எனக்கு தெரியும். அதன் பிறகு தாயகத்திலிருந்து முதலீடு செய்யப்பட்டதுகள் உண்மையில் எனக்கு தெரியாது. தாயக தளபதிகள் தற்போது வீர மரணத்தை தழுவியிருந்தாலோ இல்லாட்டி அதை ஒப்படைத்தவர்கள் தாயகத்தில் போய் செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.

ஆனால் அதை நிர்வாக2009 மட்டும் நிர்வகித்த உலகத்தமிழர் இயக்கம் , 2006 இல் தடை செய்யப்பட பின்னர் , சில சொத்துக்கள் முக்கியமாக CMR வானொலி , அந்த வானொலிக்கு இப்போது நிர்வகிப்பவர்கள் அதற்கு ஏதாவது செலவு செய்திருந்தால் அந்த செலவுகளை அவர்கள் எடுத்துக்கொண்டு, மிகுதியை கட்டாயமாக தாயகத்துக்கு சேர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அவர்களே அதை செய்யலாம். ஒரு டிரஸ்ட் அறக்கடடளை ஒன்றை உருவாக்கலாம்.

தேசிய சொத்துக்களான CMR வானொளி , TVI இருந்தது , ஒரு அலுவலகம் கட்டிடம் ஒன்று இருந்தது , 39 கோஸந்தி Road , இதை விட கோவில் இருந்தது , கோவில், ஆனால் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். எதிர் காலத்தில் தாயகத்தில் ஏதாவது செய்வார்கள் எனற நம்பிக்கை .

இதை விட வேறு நிறுவனங்கள் எட்டு நிறுவனங்கள் தொடர்ந்து உலகத்தமிழ் இயக்கத்தின் ஆதரவு அமைப்பு அல்லாவிடில் அவர்களுக்கு விரும்பியவர்களால் கட்டுப்படுத்தப்படு கொண்டு வருகின்றது , அந்த நிதியை ஒரு அறக்கடடளை போட்டு செய்வோம் , என்று ஒரு பத்திரிகையாளர் மாநாடும் வைத்தார்கள் ஆனால், இதுவரை எந்த இதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அவர்கள் செய்ய வேண்டும்….

இந்த கருத்துக்களை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் , நாங்கள் எல்லாரும் சேர்ந்து பயணிக்க வேண்டும். எதிர் காலத்தில் நாடு கடந்த அரசையும் பலப்படுத்தி எமது போராடடத்தை முன்னெடுக்கவேண்டும்.

அந்த எட்டு நிறுவனங்களும் அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. தமிழ் தொழிநுட்ப கல்லுரி , CTR வானொலி, உலகத்தமிழர் பத்திரிகை, வணிகம் புத்தகம்.  வணிகம் புத்தகம் பத்தி சொல்லணும். தற்போது இந்த வருடத்திலிருந்து எம்மோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துள்ளார். இப்போது நடந்தும் வருகிறது. இன்னும் மூன்று நிறுவனங்கள் அதாவது விளையாட்டு துறை என நினைக்கின்றேன்.

CTR வானொளி , TVI , அலுவலகம் , சுரபி இவையெல்லாமே இன்று ஒரு தனிப்பட்ட சொத்தாக மாற்றப்படுள்ளது. சுரபி அங்காடி தனது property tax கட்டமுடியாதுள்ளது. Trust க்கு வருவோம் என்று கூறியிருக்கிறரர்கள். மற்றவர்கள் சிலர் கதைக்கவே முன்வருகின்றார்கள் இல்லை.

TVI மக்களுக்கான தொடங்கப்பட்டது அது 1.5 மில்லியனுக்கு விற்கப்பட்டது. அந்த காசு முழுக்க தாயகத்துக்கு போகும் என்று ஒரு அறிவித்தல் விட்டார்கள்.  பத்திரிகையாளர் மாநாடும் செய்தார்கள்.ஆனால் இதுவரை அதற்கான காசு போகவில்லை , ஆனால் விற்கப்பட இடத்திலிருந்து மாத மாதம் போய்க்கொண்டிருக்கினறது ஆனால் அங்கு போகவில்லை .

மிக முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் , சில அமைப்பிகளின் தலைவர் எல்லாம் அந்த TVI விடயத்தில் தொடர்பாக இருக்கினறார். கனேடியன் தமிழ் காங்கிரஸ்  தலைவர் அதில் தொடப்புடையவராக இருக்கின்றார். அவர்கள் அதற்கான பொறுப்புக்கூறல் வேண்டும்.

இந்த நேரத்தில் நான் இன்னொரு விடயமும் குறிப்பிடவேண்டும் கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும் வேறு அமைப்புகளும் சில வேலைத்திட்டங்களை முனனெடுத்தார்கள். செய்து முடிக்கப்படவேண்டும். ஊர்ச் சங்கங்களில் இருந்து காசுகளை வாங்கி ” தென்ன மரவாடி என்ற வேலைத்திட்டத்துக்கு முன்மொழிந்து போனார்கள். ஆனால் அங்கு காசு போய் அந்தவேலைத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மிக முக்கியமானது பொறுப்பு எடுத்தவர்கள் நடந்து முடிக்கவில்லை. திரும்பவும் பத்திரிகையாளர் மாநாடு வைத்து அதை சொல்லவேண்டிய தேவை இருக்கிறது.

அதே போல் வேறு அமைப்புக்கள் பொதுமக்களிடம் இருந்த காசு சேர்த்து வேலை திட்டங்களை முன்னெடுத்தார்கள் என்றார் அவர்கள் அந்த வேலையை சரியாக செய்கிறார்கள் என்பதை எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தணும். நான்  இதை முக்கியமாக சொல்வது என்னவென்றால், நாங்கள் இதை குரோதத்திற்காகவோ, அல்லது அவர்களை தாக்குவதற்கோ இல்லை. மாவீரர்கள் குடும்பங்கள், போராளிகள் எல்லாரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சில கணக்குகள் இல்லாமல் இருக்கலாம். அதை எல்லாம் சரியாக்கி கொண்டு எல்லோரும் ஒரே திசையில் பயணிக்க வேண்டுமென்பது தான் என் கருத்து. மக்களும் இதை எதிர்பார்க்கிறார்கள். இந்த சொத்துக்களை வைத்துக் கொண்டு இருப்பவர்களும் குறிப்பாக இந்த 39 பில்டிங் வைத்திருப்பவர்கள் எல்லாம் எந்த ஒரு செயல்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது கவலைக்குரியது. நாங்கள் அங்கத்தவர்கள் எல்லோரும் 50, 100 என்று போட்டு தான் அந்த பில்டிங் வாங்கினோம். எங்களுடைய தேவைகளுக்காக அலுவலகத்தை பாவித்து கொண்டு motgage ஐ கட்டி கொண்டிருந்தோம். அது டபுள் விலையாக வந்த பிறகும் அதை செய்யாதது மிக கவலைக்குரிய விஷயம். அவர்கள் எல்லோரும் அதை முன்னெடுக்கணும். தேசியத்தலைவர் வரத்தான் கணக்கு முடிப்பேன் என்று சொல்வது மிகவும் வருத்தத்துக்கு உரியது. தலைவர் வந்தால் சந்தோஷப்படுவோம். இதை மக்களுக்கு கொண்டு போய் சேருங்கள்.

கனேடிய  தமிழர் தேசிய அவையின் பேச்சாளர் தேவா சாபபதி

பொதுமக்களால் இங்கே கொடுக்கப்பட்ட சொத்துக்கள் எங்கே என்ற கேள்வி பலரிடம் எழுந்துக்கொண்டிருக்கிறது . அந்த கேள்விகளுக்கான விடைகளை கூட  இங்கிருக்கின்ற ஊடகங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். 

உதாரணமாக இங்கிருக்கின்ற TVI , CMR போன்ற ஊடகங்களை இங்கிருக்கின்ற ஊடகங்கள் மக்கள் முன்னாள் வெளிக்கொண்டு வரவேண்டும் . சுரபி எனும் பல்பொருள் அங்காடி மக்களால் வாங்கப்பட்டது. அதை வெளிக்கொணரவேண்டும். இவை மாத்திரமல்ல. கனடா கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான வீடு விற்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய கணக்கை மக்கள் மன்றத்திலே வெளிக்கொணர வேண்டும். இவை மாத்திரமல்ல… keel அண்ட் finch உள்ள ஒரு  அடுக்குமாடி கட்டிடம் 6 மாதத்துக்கு முன்பாக விற்கப்படடு ஏழு மலசல கூடம் கட்டி கணக்கு முடிக்கப்படுள்ளது. அவைகளும் வெளிக்கொணரப்படவேண்டும் . இவை மட்டுமா? பொசிடினாவில் உள்ள தடைசெய்யப்பட அன்று உலகத்தமிழர்களுடைய கட்டிடம் ஒனபது மில்லியனுக்கு விற்கப்பட்டிருக்கின்றது. தலைவர் வந்தால் கணக்கு காட்டுவோம் என்கின்றீர்களே ?

தலைவர் நீங்கள் அங்கிருக்கின்ற கஷ்டப்பபட்ட உறவுகளுக்கு உதவி செய்தால் தலைவர் வந்தாலும், உங்களை பாரட்டுவார்.நீங்கள் இதை சுருட்டுவதற்காக உங்களுக்குள் நீங்களே போடப்பட்டிருக்கினற ஒரு மாயை. அதன் காரணமாக கூறுகின்றேன். தமிழர்களால் உருவாக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டுக்கு முன்பாக வேண்டப்படட அத்தனை சொத்துக்களும் இங்கிருக்கின்ற ஊடங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

இங்கிருக்கின்ற ஊடகங்கள் நேர்மையாக செயற்படுவையாக இருந்தால், மக்களால் வேண்டப்பட்ட சொத்துக்கள் மக்களிடமே செல்ல வேண்டும். அதற்கு வெளிப்படையான உங்களுடைய ஆதரவு இருக்கவேண்டும். ஆகவே ஊடகங்கள் ஊடக தர்மம் என்றால் அதுதான் ஊடக தர்மம்.  ஆகவே விளம்பரங்களை போடுவதோ , Cut and  Paste மூலம் செய்திகளை போடுவதோ ஊடகங்களின் வேலையல்ல. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தான் ஊடங்களில் வேலை.