நிலம் நழுவுகிறது – -தமிழ்;நதி

நிலம் நழுவுகிறது
காலடியில் நழுவும் நிலம்
என்னை மன்னிக்கவும்
எனது வாழ்க்கைக் கதையை
எப்போது சொல்ல விரும்பினாலும்
நிலத்தைப் பற்றியே பேசுகிறேன்
இதுதான் அந்த நிலம்.
அது உன் இரத்தத்தில் வளர்கிறது,
எனவே நீயும் வளர்கிறாய்
அது உன் இரத்தத்தில் இறந்துபோனால்
நீயும் இறந்துபோவாய்.
-பாப்லோ நெரூதா
மேற்குறித்த கவிதையிலுள்ளதுபோல, தாய்நிலத்தின் ஞாபகங்களை என்றைக்கு நான் இழக்கிறேனோ அன்றைக்கு மடிந்துபோவேன் என்றுதான் எண்ணுகிறேன். அல்லது நான் மடியும்போதே அந்த ஞாபகங்களும் மடியும். பிடித்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருப்பதில் அடையும் கிறக்கத்தைப்போல, தாய்நிலத்தின் மீதான ஒட்டுதலையும் வார்த்தைகளில் விபரித்துவிடமுடியாது. இதை உணர்ச்சிவசப்பட்ட தன்மை எனச் சிலர் பரிகசிக்கலாம். நிலம், மொழி, இனம் ஆகியவற்றால் எம்மை அடையாளப்படுத்துவது பிற்போக்குத்தனம் என, சர்வதேசியவாதிகள் என்று தம்மை விளித்துக்கொள்பவர்கள் நகைக்கலாம். ஆனால், என் பால்யத்தை, பதின்பருவத்தை, இளமையைக் கழித்த இருபத்தாறு ஆண்டுகள்தாம் என்னை இயக்குகின்றன. அந்தக் காலமே என் இலைதுளிர் பருவம். அதுவே மீண்டும் மீண்டும் என்னை இங்கு அழைத்துக்கொண்டிருப்பது.
சன்னங்களாலும் விமானக்குண்டுவீச்சுக்களாலும் குண்டுவெடிப்பு பதற்றங்களாலும்கூட அந்த வேட்கையை அழிக்கமுடியவில்லை. புயலில் மரங்களெல்லாம் வீழ்ந்துபட்டபோதிலும், குடியிருப்புகளின் மாடச்சுவர்களை அண்டிவாழும் ஒரு பறவையைப்போல, எப்பேர்ப்பட்ட அழிவுக்குப் பிறகும் இங்கு வாழவே ஏங்கினேன்.
போர் நிமித்தமோ பொருளாதார தேட்டத்தின் நிமித்தமோ பிறந்த மண்ணை விட்டு வெளியேறிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பிவரும்போது புதிய நிலங்களின் மொழிகளை, பழக்கவழக்கங்களை, சிந்தனை மாற்றங்களைத் தம்மோடு எடுத்துவருகிறார்கள். மண்ணை நீங்கிச் சென்றபோதிருந்த அதே மனிதர்களில்லை திரும்பிவருகிறவர்கள். மறுவளமாக, அதே மனிதர்களில்லை நிலத்தில் தங்கிவிட்டவர்களும். காலம் இருசாராரையும் பல வழிகளிலும் மாற்றியிருக்கிறது. புலம்பெயர்ந்துபோனவர்கள், இப்போது எல்லாவற்றையும் ஒப்பிடத் தொடங்குகிறார்கள். காலநிலை, வாழ்க்கை வசதிகள், பாதுகாப்பு, சுதந்திரம் இன்னபிறவற்றை அவர்களறியாமலே ஒப்புநோக்குகிறார்கள். சொந்த மண்ணில் சுற்றுலாப் பயணிகளாகத் தம்மை உணர்கிறவர்கள் விரைவிலேயே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இவர்களல்லாத வேறொரு மனவமைப்புக் கொண்டவர்கள் நிரந்தரமாகத் தங்கிவிடக் காரணங்களைத் தேடுகிறார்கள். அவ்வாறு தங்கிவிட்டவளுள் ஒருத்திதான் நான்.
2009இல், முள்ளிவாய்க்காலில், இலட்சக்கணக்கான தமிழர்களை மிகச்சிறிய நிலப்பரப்பினுள் குவியச்செய்து இனப்படுகொலை செய்தது இனவாத அரசு. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பிற்பாடு, அத்தனை காலமும் கொண்டிருந்த பாதுகாப்புணர்வை நாங்கள் இழந்துபோனோம். திசையறியா வனாந்தரத்தில் தண்ணீருமின்றி மணற்புயலில் சிக்கிக்கொண்டவர்களின் மனநிலைக்கு ஒப்பான திக்பிரமை அது.
போரை முடிவுக்குக் கொணர்ந்தபிறகு, (இது எவ்வளவு அபத்தமான ஆனால் வேறு வழியற்ற சொல்லாடல்) ஊரை ‘ஒப்பனை’செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டது. வடகிழக்கு மாகாணங்களில் ‘அபிவிருத்தி’ திடீரென வீங்கிப் பெருக்கத் தொடங்கியது. அது, புதிதாகப் போடப்பட்ட சாலைகளாலும் கட்டிடங்களாலும் உருவாக்கப்பட்டது. வழக்கமான விதியின்படி பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கான வழிகள் அவை.  மற்றபடி, போரினால் தம் உறவுகளை இழந்தவர்கள், புகைப்படங்களின் முன்னமர்ந்து கண்ணீரைச் சொரிந்தபடியிருக்கிறார்கள். (தீபச்செல்வனின் ‘நடுகல்’நாவலில் வந்த தாய்போல சிலரளவில் பார்த்து கண்ணீர் சிந்த புகைப்படங்கள்தானுமில்லை.) இராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்ட தம் உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா?எனும் கேள்வியுடன் அன்றாடம் அலைந்துகொண்டிருக்கிறார்கள் வேறு சிலர். கணவனை இழந்த பெண்கள், குழந்தை வளர்ப்போடுகூட வாழ்வாதாரமாகிய பொருளாதாரத்தைத் தேடி அலையவேண்டிய நிலை. அரச உளவாளிகளின் அச்சுறுத்தல் இன்னொரு பக்கம். சகல வழிகளிலும் நிர்க்கதியாகிவிட்ட முன்னாள் போராளிகள், போரினால் அங்கவீனர்களாக்கப்பட்டுவிட்டவர்கள், வீடற்றவர்கள், அநாதைகள், சித்தம் பேதலித்து தமதுலகில் வாழ்பவர்கள்…
இத்தகைய சூழலிலும் எத்தகைய சூழலிலும் இந்த மண்ணே என்னை ஈர்த்தது. ஈர்க்கிறது.
ஆனால், அயர்ச்சியும் விரக்தியும் மிக திரும்பிப்போய்விடலாம் என்று தோன்றிய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. முதலில், ‘இங்கு நான் யார்?’எனும் கேள்வி எழுகிறது. நான் முழுமையான சுதேசியும் இல்லை, அந்நியளும் இல்லை, பார்க்கப்போனால், இங்கே நிரந்தரமாக வாழ்கிறவர்களுக்கு ஒப்பீட்டளவில் எங்களைப் போன்றவர்களை விடவும் சுதந்திரம் அதிகம். உதாரணமாக, சுற்றுலாப் பயணி விசாவில் வாழ்கிற எங்களால், நியாயம் என்று தோன்றுகிற ஒரு போராட்டத்தில்கூட கலந்துகொள்ளவியலாது. கொடிகளை ஏந்துவதற்கோ ஊர்வலங்களில் கலந்துகொள்வதற்கோ எங்களுக்கு உரிமையில்லை. அரசியல் கூட்டங்களில் எங்களது பிரசன்னம் பிரச்சனைக்குரியது (எங்களுக்குத்தான்). சாதாரணச் சண்டைகளில்கூட அடக்கி வாசிக்கவேண்டிய தரப்பாக நாங்களே இருப்போம். ‘வெளிநாட்டுக்கு ஓடிப் போயிட்டு இப்ப வந்துநிண்டு நியாயம் கதைக்கினம்’என்ற வாக்கியத்தை நாங்கள் எக்கணமும் எதிர்கொள்ள நேரிடலாம்.  எங்களுடைய குற்றவுணர்வின்மீது விழும் சம்மட்டி அடி அது. பிறகு அங்கு கதைப்பதற்கு ஒன்றுமேயில்லை.
2009க்குப் பிறகு சட்டமும் ஒழுங்கும் தியங்கிப்போய்க் கிடக்கின்றன. வன்முறைக் குழுக்களும் வாள்களும் பெருகிவிட்டன.
உதாரணமாக, அடாவடித்தனத்தை எதிர்கொள்ள நேர்ந்த ஓரிரவில் பதறியபடி காவற்றுறையை அலைபேசியில் அழைத்தபோது, எனக்கும் மறுமுனையிலிருந்தவருக்குமிடையில் மொழி குறுக்கே நின்றது. அங்கே அந்நேரம் பணியிலிருந்த எவருக்கும் தமிழோ ஆங்கிலமோ தெரியாது. அவர்களுக்கு ‘சிங்களம் மட்டும்’தான் தெரியும். இத்தனைக்கும் விகிதாசாரரீதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி அது. அயர்ச்சியோடும் கோபத்தோடும் இணைப்பைத் துண்டித்தேன். கொலையே நடந்தாலும், நான் கண்ணீர் வழியப் பார்த்துக்கொண்டுதானிருக்கவேண்டும். நல்லவேளையாக அன்று கொலை நடக்கவில்லை, எங்கள் வீட்டின் பொருட்கள் மட்டுமே அடித்து நொருக்கப்பட்டன. மறுநாள் காலையில் சட்டம் தன் கடமையை உடைந்த தமிழில் ஆற்றியது.
போர் முடிவுக்கு வந்தபின் தலைவிரித்தாடும் எதேச்சாதிகாரத்தின் ஒரு துளி இது. அதிகார பீடங்களில் செல்வாக்கு அற்ற தனிமனிதர்களுக்கு நேரும் அவலம் இது. விடுதலைப் புலிகள் தமிழ்ப்பகுதிகளை தமது கட்டுக்குள் வைத்திருந்த காலத்தில் இப்படி தடியெடுத்தவர்களெல்லோரும் தண்டல்காரர்களாக இருந்ததில்லை.
எல்லாவற்றையும் பொதுமைப்படுத்துவதும் தகாது. இங்கே மனிதர்கள் அமைதியாக வாழத்தான் செய்கிறார்கள். அவர்கள் எதற்காகவும் எவரோடும் முட்டிக்கொள்வது இல்லை. கேள்வி கேட்பதும் இல்லை.
என்னுடைய அறச்சீற்றத்தை விமான நிலையத்தில் விட்டுவிட்டு வருவது நல்லது என தாமதமாகவே உணர்ந்தேன். அப்படி அறச்சீற்றம் காட்டித்தானாவோம் என்றால், உள்ளுரில் அதிகாரமுள்ளோருடன் நட்புப் பாராட்டுவதும் அவர்களுடன் தொடர்பாடல்களைப் பேணுவதும் புத்திசாலித்தனம்.
ஆக, எங்களைப் போன்ற செல்வாக்கற்றவர்கள் செய்யக்கூடியதெகல்லாம் ஒன்றுதான்: மௌனம் காப்பது! விரும்பிய நிலத்தில் வாழ்வதற்காக தன்மானம் உள்ளிட்ட சிலவற்றை விட்டுக்கொடுப்பது. அந்நியச் செலாவணியுள் எம்முடைய டொலர்களும் பவுண்ட்ஸ்களும் அடங்கினாலும், ஒரு சிக்கலென்று வரும்போது எங்களுக்கு அளிக்கப்படும் ‘மரியாதை’ஒரு மாற்றுக் குறைவாகவே இருக்கும். காரணம், நாங்கள் முன்னாள் இலங்கையர்கள் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்பவர்கள்… இந்நாள் கனடியர், பிரித்தானியர், பிரான்சியர் இத்யாதி.
மேலும், இங்கு வாழ்வதாயின், கடலில் கலந்தபின் நதி நீர் எதுவெனப் பிரித்தறிய முடியாததுபோல சமூகத்தோடு சமூகமாகக் கலந்துவிடவேண்டும். தோற்றத்திலேயே ‘நான் வெளிநாட்டுக்காரன், காரி’என்று பறையறைவித்துக்கொள்பவர்கள் குறித்து உள்ளுரில் வசிப்பவர்களிடையே ஒரு விலகலைக் காண்கிறேன். அரைக்காற்சட்டைகளை, நெற்றியில் ஏற்றப்பட்ட குளிர்க் கண்ணாடிகளை, சொகுசு வாகனங்களை… அந்நியத்தைக் காணும் விழிகளுடன் காண்கிறார்கள். அம்மனநிலைக்கு பல உளவியல் காரணங்கள் இருக்கக்கூடும். போரினுள் சிக்கிச் சின்னாபின்னாமடைந்த சராசரி மனிதர்களைப் பொறுத்தளவில் அவை நியாயமான காரணங்களும்கூட.
‘இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு எதற்காக அங்கே வாழவேண்டும்?’என்று சிலர் வினவக்கூடும். நியாயமான கேள்வி! எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடிய அதியற்புதமான வாழ்க்கை இன்னமும் அங்கே எஞ்சிருக்கிறது என்பதே என் பதில். இந்த வாக்கியத்தை நான் இறந்தகாலத்தில் முடித்திருக்கவேண்டும்.
நேசித்த, இரசித்த வாழ்க்கையும் ஏப்ரல் 21உடன் முடிவுக்கு வந்துவிட்டாற்போல தோன்றுகிறது. தேவாலயங்களிலும் விடுதிகளிலும் குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் பலிகொள்ளப்பட்டுவிட்டனர். தீவிரவாதிகளின் வாழ்விடங்கள் புலனாய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு நிர்மூலம் செய்யப்பட்டுவருகின்றன. தேடுதலின்போது கண்டுபிடிக்கப்பட்ட வீடுகளில் இருக்கும் கடும்போக்காளர்கள் குழந்தைகளையும் தங்களோடு சேர்த்துச் சிதறடித்துக்கொல்கிறார்கள். காயங்களோடு தப்பிவிட்ட குழந்தையொன்று தந்தையை அழைத்து அழும் குரல் இதயத்தை அறுக்கிறது. மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது. உயிர்த்திருத்தல் மற்றெல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. எங்கும் எப்போதும் குண்டுகள் வெடிக்கலாம் எனும் அச்சம் மக்களை நித்திய இருளெனச் சூழ்ந்துவிட்டது.
மீள்திரும்புகின்றன முன்பைவிட மோசமான நாட்கள். பத்தாண்டுக்கு முன்பிருந்த காலத்தை விடவும் மோசமான காலத்தினுள் நாம் சென்றுகொண்டிருப்பதாய் உணர்கிறோம். இனி அடையாள அட்டை இல்லாது தெருக்களில் இறங்கவியலாது. பயணிக்கும் வாகனங்கள் எந்நேரமும் வழிமறிக்கப்படலாம். பயணப்பொதிகள் கிண்டிக் கிளறப்படலாம். எம்முடைய அந்தரங்கம் என எம்மால் கருதப்பட்ட உடமைகள் பகிரங்கமாக ஒரு மேசையில் கொட்டப்படும். ஒரு டோர்ச் லைட், சமையலறைக் கத்தி, அவர்களுக்குப் பரிச்சயமற்ற ஏதோவோர் மின்னணுப் பொருள் எம்மைக் குற்றவாளியாகக் காண்பிக்கக்கூடும்.
எங்களைப் போன்றோரைப் பொறுத்தவரை திரும்பிச் செல்வதற்கு ஒரு நாடேனும் இருக்கிறது. அவ்வாறு இல்லாதவர்களின் பாதங்களின் கீழ் நின்றுகொண்டிருக்கிற நிலம் நழுவுகிறது.
புயலுக்குத் தப்பிப் பிழைத்த பறவைகளை காட்டுத்தீ சூழ்கிறது. நாம் வெளியேறிச்செல்கிறோம் துயரத்தையும் அவலக்குரல்களையும் பின்னிறுத்தி.
-தமிழ்;நதி