ரொரன்ரோ Raptors

ஆனி 13ம் நாள் கனடா மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். ரொரன்ரோ ரப்றேர்ஸ் கூடைப்பந்தாட்ட அணி, தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று சம்பியனானது. 1993ல் மொன்றியல் கனடியன்ஸ் அணியினர் தேசிய ஹொக்கி லீக்கின் சம்பியனாகி ஸ்ரான்லி கிண்ணத்தை சுவீகரித்தனர். அதன் பின்னர் மிக முக்கிய தேசிய போட்டி ஒன்றில் கனடிய கழகம் வெற்றி பெறுவது இதுவே முதல் தடவை. சுமார் 26 ஆண்டுகளின் பின்னர் பெற்ற வெற்றி இது.
1994ல் வன்கூவர் கனக்ஸ் ஹொக்கி அணியினர். 2004ல் கல்கறி பிளேம்ஸ் அணியினர், 2006ல் எட்மண்டன் ஒயிலேர்ஸ் அணியினர், 2011ல் வன்கூவர் கனக்ஸ் அணியினர் ஸ்ரான்லி கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளனர்.

ரொரன்ரோவைப் பொறுத்தவரை 1992, 1993 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக ரொரன்ரோ புளு ஜேய்ஸ் அணியினர் தேசிய பேஸ் போல் கிண்ணமான வேர்லட் சிரீஸ் கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்.2017ல் ரொரன்ரோ உதைபந்தாட்ட அணி Major League Soccer கிண்ணத்தை வெற்றி கொண்டது. ரொரன்ரோ மேப்பிள் லீப் ஹொக்கி அணி 1967ன் பின்னர் ஸ்ரான்லி கிண்ணத்தை வெற்றி பெறவில்லை.

1995ம் ஆண்டு தேசிய கூடைப்பந்தாட்ட கழகம் National Basketball Association (NBA) தன்னை விரிவுபடுத்தும் நோக்குடன் ரொரன்ரோ மற்றும் வன்கூவர் நகரங்களில் புதிய கழகங்ளை தோற்றுவித்தது. 2001-2002 ம் விளையாட்டாண்டில் வன்கூவர் அணி அமெரிக்க நகரமான Memphis, Tennessee க்கு நகர்ந்தது. இதற்கான பிரதான காரணம். வருமானம் மற்றும் கூடைப்பந்தாட்ட ரசிகர்களின் எண்ணிக்கை குறைவானதுமாகும். ரோரன்ரோவைப் பொறுத்தவரை ஒரு வித்தியசமான விளையாட்டு ரசிகர்கள் உள்ள நகரம். மேப்பில் லீப் அணியினர் தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும், அவர்களது போட்டிகளைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இலங்கை கிரிக்கெட் அணியைப் போல். தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். ஒரே அணி, ஒரே தேசம், ஒரே தோல்வி .
• ரொரன்ரோ ரப்றேர்ஸ் அணியும் படிப்படியாக தம்மை வளர்த்துக் கொண்டார்கள். பல மாற்றங்கள், புதிய, புதிய பயிற்சியாளர்கள். விளையாட்டு வீரர்கள். 1998ல் ரப்றேர்ஸ் அணியினரை Maple Leaf Sports & Entertainment Ltd. (MLSE) வாங்கினர். இந் நிறுவனத்தின் பங்குதாரர்களாக Rogers Communications (37.5%) BCE (37.5%) BCE Inc. (28%) BCE Master Trust Fund (9.5%) Kilmer Sports (25%) உள்ளனர். இந் நிறுவனத்தின் கீழ் ரப்றேர்ஸ் அணியுடன், மேப்பிள் லீப்ஸ், ரொரன்ரோ உதைபந்தாட்ட அணி, Toronto Argonauts போன்ற கழகங்களும் உள்ளன. இவர்கள் விளையாட்டின் மூலம் வியாபாரம் செய்பவர்கள். இதனால் வெற்றிகள் பணத்தை அள்ளித் தரும் என நம்பினார்கள். அதற்காக திட்டமிட்டார்கள். ஹொக்கி எப்படியாயினும் பணம் தரும். எனவே கூடைப்பந்தாட்ட அணியை படிப்படியாக சீரமைத்தார்கள்.

2018ல் உதவி பயிற்சியாளராக நீண்ட காலம் கடமையாற்றிய நிக் நேர்சை பயிற்சியாளராக மாற்றினார்கள். உடனடியாக பலன் கிடைத்தது.

Kawhi Leonard2, Kyle Lowry, Marc Gasol, Pascal Siakam, Kyle Lowry ஆகியோரின் திறமையான விளையாடும் திறன் ரொரன்ரோவிற்கு தொடர்ச்சியான வெற்றியை கொடுத்தது.
கடந்த வருட விளையாட்டு ஆண்டில் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளரை மாற்றி, புதிய பயிற்சியாளரை கொண்டு வந்த அணி முகாமைத்துவமும் இவ் வெற்றிக்கு பிரதான காரணம். இவ் வெற்றியானது கனடாவில் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு வித்திடும் எனக் கருதப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்