துருக்கியை அழித்துவிடுவோம் – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, குர்திஸ் போராளிகளை ஒடுக்குவோம் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, தமது துருப்புகளை மீளப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமது துருப்புக்கள் மீளப்பெறப்பட்டதன் பின்னர் குர்திஸ்கள் மீது தாக்குதல் நடத்தினால், துருக்கியை பொருளாதார ரீதியாக அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.

அத்தோடு, 20 மைல்கள் தொலைவில் பாதுகாப்பு வலயமொன்றை நிறுவவுள்ளதாகவும் டிரம்ப் குறப்பிட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவெடுத்தால் அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேசந்தர்ப்பத்தில், தாம் குர்திஸ் போராளிகளை துருக்கிக்கு எதிராக தூண்டிவிடவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குர்திஸ் போராளிகளை பாதுகாப்பது தொடர்பாக துருக்கியுடன் ஒப்பந்தமொன்றை எட்டும் சந்தர்ப்பம் காணப்படுவதாக, அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம் தெரிவித்திருந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலை தொடர்ந்து அவர் இவ்விடயத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.