தூத்துக்குடியில் கத்தோலிக்க பாதிரியாருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் 70 வயது கத்தோலிக்க பாதிரியாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் ஓய்வு பெற்ற கத்தோலிக்க அருட்தந்தையர்களுக்கான இல்லம் உள்ளது. இங்கு தங்கியுள்ள 70 வயது அருட்தந்தை ஒருவர் தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் இல்லத்தில் தங்கியிருந்த 14 ஓய்வு பெற்ற அருட்தந்தையர்கள் மற்றும் 3 அருட்சகோதரிகள் அந்த இல்லத்திலேயே தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அருட்தந்தைக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என தெரியவில்லை. அவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட், அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

மேலும், வெளியூர் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் எங்கெங்கு சென்றார், எப்படி தொற்று ஏற்பட்டது என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டு, இல்லம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 பேர் இறந்துள்ளனர். 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.