நெதர்லாந்தில் சவக்குழியில் படுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்

உலகம் முழுவதிலும் மனிதர்கள் தங்களின் மனஅழுத்தத்தை போக்க யோகா, தியானம் போன்ற பல்வேறு முறைகளை கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலர் உளவியல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க வினோதமான ஒரு பயிற்சியை வழங்கி வருகிறது.

அந்த நாட்டின் கெல்டர்லாந்து மாகாணத்தில் நிஜ்மேகன் நகரில் உள்ள ராட் பவுடு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தங்களின் மன அழுத்தத்தை போக்க சவக் குழியில் படுக்க வைக்கப்படுகிறார்கள்.

அரை மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மாணவர்கள் சவக்குழிக்குள் படுத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். யோகா பாய், போர்வை, தலையணை தவிர செல்போன் உள்ளிட்ட மற்ற பொருட்களை சவக்குழிக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள். இதன் மூலம் தேர்வு குறித்த பயமும், மன அழுத்தமும் நீங்கி புத்துணர்ச்சியை உணர்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.