தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் பயங்கரவாதிகளுடன் நடத்தி வந்த சமரச பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். இதனால் அமெரிக்க அரசு மீது கடும் கோபத்தில் இருக்கும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணமான லோகாரில் உள்ள குஸ்தர் பஜார் நகரில் அமெரிக்க வீரர்கள் ராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது பாய்ந்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் தனது 6 வயது பெண் குழந்தையுடன் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக இந்த குண்டுவெடிப்பில் சிக்கினார்.

இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தாள். அவளது தாய் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.