வல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை

வல்வை படுகொலை நூலுக்கு 30வது அகவை

இந்த வருடம் ஓகஸ்ட் 2ம் திகதியுடன் வல்வை படுகொலை நடந்து 30 வருடங்கள் கடந்து சென்றுவிட்டன.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

ஜனவரி 28, 2019 நானும் எனது நண்பர் ரவீந்திரனும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம்.  அவர் வல்வை  படுகொலை நூலுக்கு முன்னுரை வழங்கியதும், அதன் முக்கியத்துவம் தொடங்கி, வல்வை  படுகொலை சம்பவம் வரை எங்கள் கதை தொடர்ந்தது. சந்தர்ப்பம் வரும் போது கல்கத்தாவிற்கு சென்று அவரை சந்திக்க வேண்டும்.  அவர் மூலம் எமது ஊரில் தாக்குதல் நடத்திய இந்திய இராணுவ அதிகாரிகளை சந்தித்து “ஒரு மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்” என்று ஊடகவியலாளராக என் மனதில் ஆதங்கம் தொடங்கியது.

ஆனால் அடுத்த நாள் காலை ஜனவரி 29, 2019 ஆம் திகதி இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இறந்து விட்டார்.

திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் தகுந்த நேரத்தில் எம் இனத்துக்கான முக்கிய குரலாக இருந்தார். மூன்று நாட்களில் மட்டும் சுமார் 72 பொதுமக்கள் கொல்லப்பட்ட “வல்வை படுகொலை” எனும் ஆவண  நூலுக்கு முன்னுரை வழங்கி அந்த நூலின் சத்தியத்தை வரலாற்றாககக்கிகியிருக்கின்றார் நான் என் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும் என்று விரும்பிய மனிதர் அவர்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை

இந்தியாவில் ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது,  பிரித்தானியா இராணுவத்தினரால், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு பிரித்தானியா  அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்காமலிருந்து வந்தது. இருப்பினும், பிரித்தானிய  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துக்கொண்டிருக்கினறது .

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் 100ம் ஆண்டு நினைவு தினம் ஏப்ரல் 13, 2019. அன்றைய  சம்பவத்திற்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரித்தானிய  பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். பிரித்தானிய  நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய தெரசா மே, ‘பிரிட்டன் – இந்தியா வரலாற்றில் வெட்கக்கேடான வடுவாக ஜாலியன்வாலா பாக் சம்பவம் உள்ளது” எனத் தெரிவித்தார்

மை லாய் படுகொலைகள்

வியட்னாம் போரில் அமெரிக்காவின் ஈடுபாட்டை இஅந்நாட்டினரே விமர்சிக்க காரணமானது “மை லாய்” படுகொலைகள்.  தெற்கு வியட்நாம் பகுதியில் உள்ள மை லாய் எனும் கிராமத்தில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.

அமெரிக்க படையினரால் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஈவு இரக்கம் இன்றி கொல்லப்பட்டனர். வியட்நாம் வரலாற்றில் அழியா வடுவை ஏற்படுத்திய இந்த படுகொலைகள் 1968-ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி நிகழ்த்தப்பட்டன.

இந்த மூன்று பெயர்களும் ( ஜாலியன்வாலா பாக் படுகொலை இ  மை லாய் படுகொலை , ஜார்ஜ் பெர்னாண்டஸ் ) எனது சிறுவயதிலேயே மிகவும் பரிட்சயமான பெயர்களாக இருந்தன. வல்வை படுகொலை நூலில் ஜாலியன் வாலாபாக் படுகொலை,  மை லாய் படுகொலைகளை ஒப்பிட்டு அந்நூலை எழுதிய  திரு. வல்வை ந. அனந்தராஜ் (எனது தந்தையார்) அவர்கள் தனது நூலில் எழுதியிருந்தார். அந்நூலுக்கான முன்னுரையை இந்திய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் வழங்கியிருந்தார். 30 வருடத்துக்கு முன்னர்  இன்டர்நெட் இல்லாத காலத்தில் அப்புத்தகத்தில் இப்படுகொலை பற்றி எழுதியிருந்தார். இப்போதும்  மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது இணைய உலகில் இப்படுகொலைகள் தொடர்பாக பல ஆவணப்படங்கள் வெளிவந்துவிட்டன.

வல்வை ந. அனந்தராஜ் அவர்கள் 26 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கின்றார். அதில் சில புத்தகங்களுக்கு சாகித்ய விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சில தனது பாடசாலை, கல்வி அமைச்சு கல்வி அனுபவங்களை கொண்டு எழுதப்பட்டவை. சில போரின் சாட்சிகளாக நாகர்கோவில் பாடசாலை படுகொலையான “உதிரம் உறைந்த மண்”, வல்வை புயல், சமர் கண்ட முல்லைத்தீவு  என 26 நூல்களை எழுதியுள்ளார். அதில் “அதிபர்களுக்கான முகாமைத்துவம் எனும் நூல் பாடசாலை அதிபர்களுக்கான பரீட்ச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சுமார் 4 தடவைகள் பதிப்பிக்கப்பட்டது.

கனேடிய வாழ்வில் ,அவரது சில புத்தகங்கள் நான் வாசிக்காமலே கடந்து போகின்றன. ஆனாலும், வல்வை படுகொலை எனும் நூல் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நூலாக இருக்கின்றது .

1989 ஆம்  ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி எனக்கு 14 வயது. ஊரெல்லாம் சுற்றிவளைப்புகளும், வெடிச்சத்தமும் காதைப் பிளந்தவண்ணம் உள்ளன. எங்கள் வீடு தெருவின் கடைசியில் உள்ளதாலும், எனது தந்தையார் பாடசாலை அதிபர் மற்றும் பிரஜைகள் குழு செயலாளராகவும் இருந்ததால் சுமார் 60க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கியிருந்தார்கள்.

திடீரென பிரதான வீதியில் இருந்த மாமியின் மகள்கள் இருவர், ” மாமா எங்கள் வீட்டை ஆர்மி எரித்து விட்டார்கள், அம்மா வரட்டுமாம்” என்று அப்பாவை அழைத்துச் செல்கின்றார்கள். அவர் தனது சகோதரியின் வீட்டின் நெருப்பை அணைக்கும் போது இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.

ஓகஸ்ட் 2 , 3 , 4ம் திகதிகள் நகர்கின்றன. ஊரெல்லாம் மரண ஓலம்.  தந்தை  இன்னமும்  வீடு  திரும்பவில்லை. வீட்டுக்கு வருபவர்கள் போபவர்கள் எல்லாருமே ஒரு மௌனமாக தான் வந்து போனார்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இராணுவத்தினரின் ரக் வண்டி மோதி இறந்தார். அவர் தன்னை போல் “இவளும் வாழாவெட்டியாக போயிட்டாள்“ என்று ஓலமிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவின் நண்பர்கள், மாணவர்கள் அதிகமாக வீட்டுக்கு வந்து போனார்கள் .

அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத நாட்கள்…

ஐந்து நாட்களின் பின்னர் குற்றுயிராக பலத்த அடி, காயங்களுடன் அப்பா புது ஜென்மம் எடுத்து வருகின்றார். அதற்கு பின்பு பல மாதங்கள் எனது தந்தையை  நான் ஓய்வில் பார்க்கவேயில்லை. நிறைய பேர் வருகின்றார்கள். பிரஜைகள் குழு தலைவர் செல்வேந்திரா , மணியண்ணா, தில்லையம்பலம், ஜோகேந்திரன் உட்பட மேலும் பல இளைஞர்கள், மாணவர்கள் என எமது வீடு ஒரு மிகப்பெரும் ஆவணப்படுத்தலுக்கு தயாராகிறது. அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் ஒளி, ஒலி வடிவங்களில் பதிவு செய்து , தடடச்சு செய்கின்றார். பல பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்கின்றார்கள். அந்த நாட்களை நினைக்கும் போது அந்த தட்டச்சு ஒலி இன்னமும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

சில நாட்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து சத்தியப் பிரமாண  வாக்குமூலங்களுடன், இந்தியாவிடம் நீதி கேட்டு , வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ராணுவ முகாம்களுக்குள் மத்தியில்  அதிகாலை யிலேயே அவர் படகு மூலம் இந்தியாவுக்குப் பயணமாகின்றார் .

எனது  குடும்பம் சாதாரணமானது தான். தந்தை பாடசாலை அதிபர். ஊரில் மிகப் பெரிய வல்வை கல்வி மன்றம் எனும் டியூஷன் சென்டர், அதை விட அம்மாவின் கோழிவளர்ப்பு சுமார் 100 கோழிகள் வரை முட்டைக்காக வளர்ப்பார். அதை விட அப்பாவிடம் பொதுச்சேவை விடயமாக அப்பாவுடன் நடைபெறும் பொதுமக்கள் சந்திப்புக்கள் இப்படியாக இருந்த எமது வாழ்க்கை முழுவதும் மாறிப்போனது .

நாட்டில் இல்லாத எனது தந்தையை தொடர்ந்து  தேடிவரும் இராணுவமும், இரவில் தேடிவரும் ஒட்டுக்குழுக்களும் அதிகரித்து கொண்டுசென்றது. அம்மாவுக்கு என்னையும், எனது இரு தங்கைகளையும் பாதுகாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே போனது.

முதலில் அயல் கிராமங்களில் பாதுகாப்பை நாடிய நாம், சிங்கள கிராமங்கள்,  பலாங்கொடை மட்டும் எங்களை அந்த இராணுவம் நாட்டை  விட்டு வெளியேறும்  வரை அம்மா அடைக்கலம் தேடி பாதுகாத்தார்.

ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் படகு மூலம் இந்தியா சென்ற எனது தந்தை இந்தியாவில் அவரை அனுப்பிய நண்பர்களின் உதவியுடன்  கல்கத்தாவிலும், தமிழ்நாட்டிலும், தில்லியிலும் பல இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்திய சர்வதேச ஊடகங்களுக்கு இச்செய்தியை வழங்குவதற்கும்  வாய்ப்புகள் வந்தது. அங்கிருந்து வல்வெட்டித்துறை மக்களுக்கு நீதி கேட்டும், இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்க்காகவும் ” வல்வை படுகொலை ” என்னும் நூல் தமிழிலும், சத்திய கடதாசிகள் உள்ளடங்கிய  India’s Mylai – Massacare at Valvettiturai என்று ஆங்கிலத்திலும் தலா 30 000 பிரதிகள் வெளிவந்தன. இதில் 20000 பதிப்புகள் டில்லியில் கொடுக்கப்பட்டன. அந்த ராணுவம் எமது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. புத்தகம் முழுவதும் மக்களின் 200க்கும் மேற்பட்ட சத்திய கடதாசிகள், காணொளிகள், புகைப்படங்கள் நிறைந்தவை. அது மட்டுமல்லாது மூடிமறைக்கப்பட்ட  வல்வைப் படுகொலை உலக நாட்டு செய்திகளில் முக்கியத்துவம் அடைந்தது.

இன்றும் அன்றைய நாட்கள், வாழ்நாளில் மறக்க முடியதாகவே உள்ளது. எனது தந்தை தனது 40வது வயதில் நீதி கேட்டு போராடியது ஒரு தவம். இப்போது அதே வயதில் எங்களால் நினைத்துக் கூட பார்க்கமுடியாத, தனி மனித ஆச்சரியமாகமும் சரித்திரமாகவும்  இருக்கிறது. அவர் தன் மீது அதீத நம்பிக்கை வைத்தார் ,மரண பயமான கடல் பயணத்தையும் தாண்டி நினைத்தை சாதித்து விட்டு வீடு திருப்பினார் . ஒருவர்  பொதுவாழ்க்கைக்கு வரும்போது அவரது குடும்பத்தின் மறுபக்கம் எப்படியிருக்கும் என்று நன்றாக அனுபவித்தவன். ஆனாலும், இந்நூல் உருவாக்கம் அவரது அர்ப்பணிப்பு, உழைப்பு, தற்துணிவு  எல்லாமே அவரை என்னுள்  ஒரு கதாநாயகனாகவே வைத்திருக்கிறது.

India’s Mylai   ஆவணப்படம்

அந்த நூலுக்கான நீதி இன்னமும் எம் மக்களுக்கு கிடைக்காத வரை, 2005 ஆம் ஆண்டு லண்டன் நகரில் 2ம் பதிப்பாக சுமார் 3000 பிரதிகளை வெளியிட்டிருந்தேன். இந்த ஆண்டு 30வது ஆண்டாக 1000 பிரதிகளை கனடாவில் வழங்கியிருந்தேன். அது மட்டுமன்றி அது தொடர்பான ஆவணப்படம் ஒன்றையும் இன்று வெளியிடுகின்றேன். புத்தகத்தின் பிரதியை PDF வடிவில் இணையத்தில் பெறலாம்.

பலரது உழைப்பில் தயாரான இவ்  ஆவணப்படம் என் 14 வயதில் எனது தந்தையார் எங்களை விட்டு நாடு விட்டு சென்று, அவரது வாழ்நாளில் சிறுபகுதியை  அந்நூலுக்காக அர்ப்பணித்த பாதிப்புகளிருந்து உருவான எனது உழைப்பாகவே கருதுகின்றேன். ஒவ்வொரு சம்பவங்களுக்குள்ளும் பலரது கதைகள் இருந்தாலும்,நான் இவ் ஆவணப்படத்தை எனது தந்தையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளேன்.

இப்படத்தை இயக்கியவர் மதிசுதா என்னும் ஈழத்து படைப்பாளி. பல வெற்றிபெற்ற குறும்படங்களை இயக்கியுள்ளார். அவரது தந்தை தில்லையம்பலம் அப்பாவின் மிக நெருங்கிய நண்பரும், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவில்  முக்கியமானவரும் ஆவார்…அப்பா இந்தியாவுக்குச் சென்ற பின்னர் சில வாரங்களில் அவரும் இந்தியாவுக்குச் சென்று அவருடன் இணைந்து செயலாற்றினார். 30 வருடத்துக்கு முன்னர் இந்நூலின் ஆவண திரட்டலில் அவரது பங்கும்  முக்கியமானது. ஆனால், அந்த நாட்டுப்பற்றாளர் நம்மோடு இல்லை. அவரது மகன் சாந்தன் கடந்த 28 வருடங்களாக நீதி மறுக்கப்பட்டு இந்திய பிரதமர் கொலைவழக்கில் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றார்.

வல்வை படுகொலை இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று ஆரம்பித்த இடப்பெயர்வு கடந்த 30 ஆண்டுகளில் அந்த சிறு கிராமத்திலிருந்து சுமார் 85 விதமான மக்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஐக்கிய ராச்சியம், கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து அகதி கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், பழகியவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரை மட்டும் இந்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தியுள்ளோம். இதில் முக்கியமானவர் எனது உற்ற நண்பன் ஜெகன்ராஜ் ராஜகுரு அவர்கள் தனது 14வது வயதில் தனது தாயையும், தம்பியையும் பறிகொடுத்து இப்போது லண்டனில் வசித்து வருகின்றார். ஏற்கனவே இலங்கை இராணுவத்திடம் தந்தையை பறிகொடுத்த நண்பன், தாயையும் பறிகொடுத்த நிலையை இன்னும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படியாக அந்த கிராமத்தில் எல்லா வீட்டிலும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள்.

அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் , உடல் அங்கங்களை இழந்தவர்களும் இன்னும் அந்த சோகத்தைச் சுமந்து கொண்டுதான் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களுக்கான நீதி கிடைக்கும் போது அதுவே எம் இனத்துக்கான விடுதலையை வென்றெடுக்கும்

இகுருவி பத்திரிகை சிறப்பு இதழாக வெளிவந்திருக்கின்றது

http://www.ekuruvi.com/wp-content/uploads/2019/08/august-ekuruvi-web.pdf

” வல்வை படுகொல” நூல் (தமிழ் ஆங்கில வடிவம் இணையத்தில்

நவஜீவன் அனந்தராஜ்