எழுத்தாளர்களுக்கும் – வாசகர்களுக்கும் உறவுப் பாலமாகும் ‘எங்கட புத்தகம்’ சிறப்பு காட்சிக்கூடம்

யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இம்முறை 11ஆவது தடவையாக 24, 25, 26ம் திகதிகளில்நடைபெற உள்ளது, கடந்த 10 முறையும் புத்தகங்கள் காட்சிக்கூடங்கள் எதுவும் இல்லை என்பது பலரது ஆதங்கமாக இருந்தது. புதிய வெளிச்சம் தாயகத்தின் செயற்பாட்டாளரும் , இயற்கை விவசாயவழி இயற்க செயற்பாட்டாளருமான நண்பர் குலசிங்கம் வசீகரன் அவர்கள் இந்த வருடம் நடைபெறும் இந்த 11ஆவது கண்காட்சியில் “எங்கட புத்தகங்கள்’ இன் மூலம் அனைவரது ஆதங்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் 1 லடச்சதுக்கும் அதிகமான மக்கள் பார்வையிடுகின்ரார்கள்.

எழுத்தாளர்களுக்கும் – வாசகர்களுக்கும் உறவுப் பாலமாகும் ‘எங்கட புத்தகம்’ சிறப்பு காட்சிக்கூடம்

யாழ்ப்பாணத்தில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறு 24, 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக ‘எங்கட புத்தகம்’ எனும் சிறப்புக் காட்சிக்கூடம் அமைகின்றது. அதில் சிறப்பு புத்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

இம்முறை இடம்பெறுகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியானது ஈழத்து எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் சங்கமமாக விளங்கப் போகின்றது.

இதில் தாயகம், புலம் என பரந்து வாழ்கின்ற எம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பார்வைக்கு செல்கின்றது.

இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாசகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நூறுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை முழுமையாக கவனித்து வருகிறார் இயற்கை வழி செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான குலசிங்கம் வசீகரன்.

சகல புத்தகங்களுக்கும் 10 வீதம் கழிவும், சில புத்தகங்களுக்கு 25 வீதம் வரை கழிவுகளும் வழங்கப்படவுள்ளன.

“ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்… வாசகன் அதனை முடித்து வைக்கிறான்”. என்கிறார் சாமுவேல் ஜான்சன் என்கின்ற பேரறிஞர்.

நாம் ஒவ்வொருவரும் இம்முறை எங்கட புத்தகம் கண்காட்சிக்கு சென்று எம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி வாசிப்போம். எழுத்தாளர்களை ஊக்குவிப்போம். புத்தகங்களை கொண்டாடுவோம்.

தீவிர வாசகனாகவும் விளங்கும் வசீகரனிடம் பேசிய போது,

நேரத்தையும் பணத்தையும் செலவழித்து புத்தகங்களை எழுதினால் அதனை வாசகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பது ஒரு பெரும் சவாலாகும். நீண்ட காலமாகவே இந்த விடயம் எங்களின் எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்தது.

சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி பெருமையாக பேசும் நாம் எங்களின் எழுத்தாளர்கள், எங்களின் புத்தகங்கள் பற்றி பெரிதாக பேசுவதில்லை.

ஒரு எழுத்தாளனின் எழுத்து தான் பேச வேண்டும். அந்த எழுத்து பேச வேண்டும் என்றால் அதனை வாசகன் வாசிக்க வேண்டும். அப்படி வாசகனிடம் போய் சேராத நிலையில் எழுதிய எழுத்துக்கே ஒரு அரத்தமில்லாது போய் விடும். இந்நிலையில் அடுத்த புத்தகத்தை எழுதுவது என்பது கேள்விக் குறியாகிவிடும்.

பெரியளவில் வாசகனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான பொறிமுறைகள் எதுவும் பெரிதாக இல்லாத நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

இந்நிலையில் தான் நான் நீண்டகாலம் யோசித்து தான் இம்முறை பருத்தித்துறை நண்பர்கள் அமைப்போடு இணைந்து யாழ்ப்பாணம் வர்த்தக சம்மேளனத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.

இங்குள்ள பல புத்தகக்கடைகளில் எம் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை. “இந்த புத்தகங்கள் விற்காது தம்பி, இதை ஒருவரும் வாங்க மாட்டினம்”. போன்ற நோகடிக்கும் வார்த்தைகள் சொல்லப்படுவதாக பல இளம் எழுத்தாளர்கள் குறைப்பட்டிருக்கின்றார்கள்.

எனது இந்த முயற்சிக்கு எம் எழுத்தாளர்களிடம் இருந்து பேராதரவு வந்து கொண்டிருக்கின்றது. என்றார்.

மேலும் பல விடயங்களை காணொளியில் பகிர்ந்து கொள்கிறார் கேளுங்கள்.

நிமிர்வு