13 ஆவது திருத்த சட்டம் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது

தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை வழங்க இந்தியா விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு தீர்வாகுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இன்று வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மாத்திரம் 13 ஆவது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13 ஆம் திருத்தச் சட்டம் மாற்றப்பட்டிருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் நிலங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் முன்னரைவிட மிக மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனை இந்தியா உணர வேண்டும் எனவும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவே பாதுகாப்பு அரண் எனவும் கூறியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது ஒரு கையினால் சிறிதளவு அதிகாரத்தைக் கொடுத்து மறு கையினால் அதனை எடுத்துக்கொள்ளும் ஒரு சட்டக் கையாளுகை என்பதை தான் முதலமைச்சராக இருந்த போது உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை கூட்டாக வலியுறுத்தியுள்ளமையை இலங்கை அதிகாரிகளும், இந்தியாவும் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.