ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு – சீனா கோபம்

இங்கிலாந்தின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங் இப்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஹாங்காங்கை சீனாவிடம் 1997-ம் ஆண்டு இங்கிலாந்து ஒப்படைத்தபோது, ஹாங்காங்கின் சுயாட்சிக்கு உத்தரவாதம் தரப்பட்டது.
ஆனால் தற்போது ஹாங்காங்கின் சுயாட்சியை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்தன.
இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள்கின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தனியார் அமர்வில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தன. சீனாவின் பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் என கூறின.
முறையான கூட்டத்தை தடுத்த சீனா, இந்த தலையீடை நிறுத்துமாறு அவர்களை கோபத்துடன் எச்சரித்தது.
சீனா தனது நடவடிக்கையில் உறுதியாக இருந்தால் ஹாங்காங்கில் இங்கிலாந்து பாஸ்போர்ட்டு வைத்துள்ள 3½ லட்சம் பேருக்கு தாங்கள் குடியுரிமை வழங்குவதற்கு பாதை வகுப்பதாகி விடும் என்று இங்கிலாந்து கூறி உள்ளது. ஆனால் இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அப்படிச்செய்தால், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என கூறியது.
ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவையும் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை குறைகூறின. இதையொட்டி சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.